தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பகுதிநேர எம்.பி.ஏ. படிப்பு சிறந்ததா?

பகுதிநேர எம்.பி.ஏ. படிப்பு சிறந்ததா?

பகுதிநேர எம்.பி.ஏ. படிப்பு சிறந்ததா?


UPDATED : ஜன 29, 2011 12:00 AM

ADDED : ஜன 29, 2011 12:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2011 12:00 AM ADDED : ஜன 29, 2011 12:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு


இதுபோன்ற நிலையில்தான் முழுநேர எம்.பி.ஏ. படிப்பா? அல்லது பகுதிநேர எம்.பி.ஏ. படிப்பா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது பல புகழ்பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனங்கள், பணிபுரியும் நபர்களின் தேவைகளை ஈடுசெய்ய, பல வாய்ப்புகளுடன் கூடிய பகுதிநேர எம்.பி.ஏ. படிப்புகளை வழங்குகின்றன. இதன்மூலம் ஒருவர் பணியிலிருந்து விலகித்தான் எம்.பி.ஏ. படிக்க முடியும் என்ற நெருக்கடி நிலை தவிர்க்கப்படுவதுடன், தேவைப்படுவோர் எம்.பி.ஏ. படிப்புகளை மேற்கொள்ளவும் முடிகிறது.


முழுநேர எம்.பி.ஏ. படிப்புகள் 12 முதல் 15 மாத காலகட்டம் உடைய ரெசிடென்ஷியல் படிப்புகளாகவும் உள்ளன. இந்த படிப்பின் பாடத்திட்டம், வழக்கமான 2 வருட எம்.பி.ஏ. படிப்பின் பாடத்திட்டங்களை போன்றே இருக்கும். பகுதிநேர எம்.பி.ஏ. படிப்பில் பல வகைகள் இருக்கின்றன. சில படிப்புகள் வழக்கமான வகுப்பறை பாடத்திட்டம் போன்றே 3 வருடங்கள் என்ற கால அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.


சில படிப்புகள் வார விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடைபெறும் வகையில் 3 வருட படிப்புகளாக உள்ளன. சில படிப்புகள் தொலைநிலை மற்றும் நேரடி படிப்புகளின் அம்சங்கள் கலந்ததாக இருக்கின்றன. சமீப காலங்களில் பகுதி நேர படிப்பில் பல சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


பகுதிநேர எம்.பி.ஏ. படிப்பை மதிப்புள்ளதாக மாற்றிய சில அம்சங்களை நாம் இங்கே ஆராயலாம்.


தேவைகளை கற்றல் - தனிப்பட்ட நிர்பந்தம்:


வாழ்க்கையில் ஒரு சிறந்த தொழில்துறை நிபுணராக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர், எம்.பி.ஏ. பட்டத்தையும் கொண்டிருந்தால் அவரின் கனவு எளிதில் நிறைவேற வாய்ப்பு ஏற்படும். பகுதி நேர எம்.பி.ஏ. படிப்பை விரும்புபவர்கள் பொதுவாக 33 முதல் 35 வயதுக்குள், ஒரு நிறுவனத்தில் நடுநிலை அதிகார மையத்தில் இருப்பவர்களாக உள்ளனர்.


அவர்கள் இந்த படிப்பின் மூலமாக தங்களின் நிறுவனத்தில் உயர்பதவியை அடைய நினைக்கின்றனர். மேலும் இதுபோன்ற நபர்களுக்கு குடும்ப வாழ்க்கை, பணம், வேலை சூழல் போன்ற பல விஷயங்களில் நெருக்கடி இருக்கும். எனவே அவர்களால் 2 வருட முழுநேர எம்.பி.ஏ. படிப்பில் சேர்வது இயலாத ஒன்றாக இருக்கும். எனவே பல பகுதி நேர எம்.பி.ஏ. படிப்புகள், இதுபோன்ற சூழலில் வாழும் நபர்கள், தங்களின் வசதிக்கேற்ப வகுப்புகளில் கலந்துகொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றன.


வசதியான நிலைகள்:


பகுதிநேர எம்.பி. ஏ. படிப்பு மாலை நேர படிப்பாக ஆரம்பிக்கப்படுகையில், படிநிலைகள் இருந்தன. மேலும் ஒரே நகரத்திலிருக்கும் தொழில்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மாலை நேர படிப்பு என்று எடுத்துக் கொண்டாலும், பகல் முழுதும் அலுவலகத்தில் பணியாற்றிவிட்டு, மாலையில் வகுப்பில் கலந்துகொண்டு, பின்னர் பிற வீட்டு வேலைகளையும் முடித்து, இதையே தொடர்ச்சியாக செய்வது பலருக்கும் கடினமான ஒன்றுதான். எக்சிகியூடிவ் படிப்பிற்கான தேவை மறைமுகமாக இருந்தாலும், அந்த படிப்புகளை மேற்கொள்பவர்கள் மிகவும் குறைவே. ஆனால் இன்று பல படிப்புகள் படிப்பவர்களின் தேவையை பொறுத்தே வடிவமைக்கப்படுகின்றன.


இன்று பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள் கேம்பஸ் சார்ந்த மற்றும் கேம்பஸ் சாராத படிப்புகளை கலந்து தங்களின் பாடத்திட்டங்களை வடிவமைத்துள்ளன. உதாரணத்திற்கு, 2 வருடங்கள் கொண்ட ஒரு படிப்பு, வருடத்திற்கு 3 தேர்வுகள் வீதம், மொத்தம் 6 தேர்வுகளை கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு தேர்வு காலத்தின் தொடக்கத்திலும் மாணவர்கள் கல்வி நிறுவன வளாகங்களிலுள்ள வகுப்பறை பாட நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் பகுதிநேர படிப்பாளிகள், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடும் வாய்ப்புகளை பெறுகின்றனர். இந்த முறையானது, பகுதி நேர படிப்பின் தரத்தை கூட்டுவதாக உள்ளது.


மேலும் சில மாலை நேர படிப்புகள், வார இறுதிநாள் படிப்பாக மாறியுள்ளன. இந்த படிப்புகளின் நேரம் வாரத்திற்கு 12 முதல் 15 மணி நேரங்களாகவும், படிப்பின் மொத்த கால அளவு 100 வாரங்களுக்கும் மேலாக இருக்கும். இதைத்தவிர பகுதிநேர படிப்புகள் 3 வருட படிப்புகளாகவோ, 1.5 வருட படிப்புகளாகவோ இருக்கலாம். மொத்தத்தில் படிப்பவர்களின் வசதிதான் முக்கியம்.


இந்த பகுதிவரை கடந்த 27-01-2011 அன்று வெளியிடப்பட்டது. தற்போது அதன் தொடர்ச்சியும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.


பாடத்திட்டம்:


முழுநேர எம்.பி.ஏ. படிப்பின் பாடத்திட்டத்திற்கும், பகுதிநேர எம்.பி.ஏ. பாடத்திட்டத்திற்கும் நோக்கத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. மாணவர்களின் நடத்தை திறன்கள் மற்றும் கருத்தாக்க அறிவை மேம்படுத்துவதே படிப்பின் நோக்கம். பலவிதமான துறைகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுதலின் மூலம் கற்பவர்கள் தங்களின் அறிவை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. இந்த அம்சத்தை மனதில் வைத்தே, பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.


பகுதிநேர எம்.பி.ஏ. படிக்கும் பல மாணவர்கள், 3 முதல் 5 வருடம் பணி அனுபவம் உள்ளவர்களாக இருப்பதால், வகுப்பில் அவர்கள் படிக்கும் விஷயங்களை நேரடியாக வேளையில் பயன்படுத்த முடியும். இதனால் படிப்பின் பயன்பாட்டுத் தன்மை அதிகரிக்கிறது. ஏனெனில் முழுநேர எம்.பி.ஏ. மாணவர் தான் படித்ததை நிஜத்தில் பொருத்திப் பார்க்க முடியாது. ஆனால் வேலை செய்துகொண்டே படிக்கும் பகுதிநேர மாணவர், தன் அலுவலகத்தையே ஒரு சோதனை கூடமாக மாற்றிக் கொள்கிறார். படிப்பில் வரும் ஒரு அம்சமானது, வேலை சம்பந்தமாக அவருக்கு ஏற்கனவே அறிமுகமானதாக இருக்கும். இதுதான் முழுநேர மற்றும் பகுதிநேர எம்.பி.ஏ. படிப்புகளுக்கு இடையேயான வித்தியாசம்.


தற்போது பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள், 3 வருட எம்.பி.ஏ. படிப்பின் சிக்கலான நிலையை உணர்ந்துள்ளன. எனவே அந்த படிப்பிலுள்ள அடிப்படைகளை நீக்கிவிட்டு, அதை 18 மாத படிப்பாக மாற்றியுள்ளனர். ஏனெனில் பகுதிநேர எம்.பி.ஏ. படிப்பவர்கள் பலரும் பல வருடங்கள் வேலை அனுபவம் கொண்டவர்களாக உள்ளனர்.


தொலைநிலைக் கல்வி:


கடந்த காலங்களில் தொலைநிலை கல்வி என்றால், பல்கலைக்கழகங்களின் தொலைநிலை கல்வி மையங்கள் மட்டுமே அவற்றை நடத்தும். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தங்களது சிறந்த ஆசிரியர்களுடன் தொலைநிலை கல்வி மாணவர்களை உரையாட வைக்கின்றன. வி-சாட் அடிப்படையிலான தொலைநிலை படிப்புகள் மூலம் பல பகுதிகளிலும் உள்ள மாணவர்கள் பயன்பெற முடிகிறது.


வேலைவாய்ப்பு:


கடந்த காலங்களில் பகுதிநேர எம்.பி.ஏ. பட்டதாரிகள் முக்கியத்துவமுள்ள வேலை வாய்ப்புகளை பெறுவது கடினமாக இருந்தது. நிறுவனங்களில் அந்த படிப்பு மதிப்பை பெறவில்லை. ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் தங்களின் பதவி நிலையை உயர்த்திக்கொள்ளவும், சம்பளத்தை அதிகரித்துக் கொள்ளவுமே பயன்பட்டது. ஆனால் இன்றோ நிலைமை வெகுவாக மாறிவிட்டது. பகுதிநேர எம்.பி.ஏ. படிப்புகளை, வேலைவாய்ப்பு நிறுவனங்கள் நல்ல தகுதியாக பார்க்க ஆரம்பித்துள்ளன.


பகுதிநேர மாணவர்கள் நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து அவர்களுக்கு அழைப்பு வருகிறது. பரந்த அளவில் ஏற்கும் ஒன்றாக பகுதிநேர எம்.பி.ஏ. அந்தஸ்து பெற்றுவிட்டது. அதேசமயம் இந்த படிப்பில் இருக்கும் ஒரேகுறை என்னவென்றால், கல்வி நிறுவன வளாகத்தில் மாணவர்கள் முழுநேரமும் இருக்க முடியாது என்பதுதான். இதனால் அவர்கள் பல நல்ல கலந்துரையாடல் சூழல்களையும், அதிகளவிலான ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும் இழக்கிறார்கள்.


அதேசமயம் இத்தகைய குறைபாடுகளை கலையும் விதமாக, சமீபத்திய பகுதிநேர பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. கடந்த சில வருடங்களாக பகுதிநேர எம்.பி.ஏ. படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. எனவே பகுதிநேர எம்.பி.ஏ. படிப்பானது, செலவழிக்கும் பணத்திற்கும், நேரத்திற்கும் நல்ல உபயோகமான ஒன்றாகவே இருக்கிறது.


 


 



 


 


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us