UPDATED : பிப் 05, 2011 12:00 AM
ADDED : பிப் 05, 2011 11:10 AM
சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, மாநில அளவிலுள்ள கல்லூரி மற்றும் பல்கலை பேராசிரியர்களுக்கான ஸ்லெட் தேர்வு ஏப்ரலில் நடத்தப்படுகிறது.
தமிழகத்திலுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக ஆவதற்கு மாநில அரசால் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. கடைசியாக ஸ்லெட் தேர்வு கடந்த 2008 ம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போது தேர்வெழுதிய 20,972 பேரில், வெறும் 465 நபர்களே தேர்ச்சி பெற்றனர். ஒருவர் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுவதற்கு அவர் நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சமீபத்தில் மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்தது. அந்த முடிவை சென்னை உயர்நீதி மன்றமும் உறுதி செய்தது.
இந்த புதிய அறிவிப்பால், கல்லூரி மற்றும் பல்கலைகளில் பேராசிரியர்களை நியமிப்பதில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. ஸ்லெட் தேர்வு தொடர்ச்சியாக நடத்தப்படுவதில்லை. நெட் தேர்வு மட்டுமே 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆனால் இந்த தேர்வு ஸ்லெட் தேர்வைவிட மிகவும் கடினம் என்பதால், இதில் தேர்ச்சி பெறுபவர்களின் விகிதம் மிகவும் குறைவு. எனவே இதுபோன்ற சூழலில் ஸ்லெட் தேர்வு, உதவிப் பேராசிரியர் பணியை பெற விரும்புபவர்களுக்கு ஒரு தீர்வாக அமையும் என்று நம்பப்படுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
