UPDATED : பிப் 08, 2011 12:00 AM
ADDED : பிப் 08, 2011 01:33 PM
பிராந்திய மொழிகளுக்கு ஊக்கம் தரும் வகையில், மொழிபெயர்ப்பு சம்பந்தமான படிப்புகளை டெல்லியிலுள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரி தொடங்கியுள்ளது.
இந்த மொழிபெயர்த்தல் படிப்பு மையமானது, பிற கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கும்தான். அவர்களும் இங்கு வந்து சுதந்திரமாக கற்கலாம். இந்த மையத்தின் தலைவராக டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஹரீஷ் திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பேராசிரியர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் கொண்ட குழுவும் உள்ளது. இந்த மையமானது, பல்வேறு பிராந்திய மொழிகளிலுள்ள இலக்கிய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்.
ஆரம்பத்தில் தமிழ், உருது, பஞ்சாபி, ஹிந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தனது பணியை இந்த மையம் துவக்கும். இதற்கடுத்து பிற உள்நாட்டு மொழிகளிலும், நேபாளி, ஜெர்மன் மற்றும் பிற ஐரோப்பிய மொழிகள் அடங்கிய வெளிநாட்டு மொழிகளிலும் பணிகளைத் தொடங்கும்.
மொழிபெயர்ப்பாளர் தொழிலை வேண்டுவோரின் விருப்பத்திற்காக, 6 மாத கால அளவினைக் கொண்ட ஒரு டிப்ளமோ படிப்பை இந்த மையம் வரும் ஜூலை மாதம் துவக்க உள்ளது. இந்த டிப்ளமோ படிப்பை படிப்பதன் மூலம் ஒருவர் நிச்சயம் மொழிபெயர்ப்பாளர் ஆக முடியும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இந்த மையத்தினால் பிராந்திய மொழிகள் வளர்ச்சியடைவதோடு, பலரது மொழித்திறனும் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
