UPDATED : ஏப் 07, 2011 12:00 AM
ADDED : ஏப் 07, 2011 02:47 PM
மூலப்பொருள்கள் அல்லது வேதி பொருள்களை, பயன்படுத்தத்தக்க வடிவத்துக்கு மாற்றுவதைப் பற்றி ஆராய்கிறது வேதிப் பொறியியல் துறை.
ஆற்றல் துறைகளான பெட்ரோலியம், எரிவாயு, பிளாஸ்டிக், பெட்ரோகெமிக்கல்ஸ் ஆகியவையும், உரங்கள், உணவு பதப்படுத்தல், சிமென்டுகள், சோப் மற்றும் டிட்டெர்ஜென்ட், வாசனை திரவியங்கள், அழகு சாதனப்பொருள்கள் ஆகிய துறைகளும் சிறப்பு வேதிப்பொருள்களான பூச்சுகள், பெயிண்டுகள், சாயங்கள் மற்றும் இங்க்குகள் ஆகியவையும் மருந்து உற்பத்தி, காகிதம் மற்றும் காகிதக்கூழ், பாலிமர்கள், உயிர்தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் நலம் மற்றும் பாதுகாப்புத்துறை ஆகிய தொழில் துறைகளில் வேதிப்பொறியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
நம் அன்றாட வாழ்க்கையில், வேதிப்பொறியாளர்கள் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்:
வேதிப்பொறியாளர்கள்
1. உரங்கள் உற்பத்தி செய்யும் முறைகளை மேம்படுத்தி உணவு பொருள் உற்பத்தியையும் தரத்தையும் அதிகரித்தல், உணவு பதப்படுத்தும் முறையை மேம்படுத்துதல்.
2. செயற்கையான புதுப்புது இழைகளை கண்டுபிடிப்பதன்மூலம் நமது துணிகளின் தரத்தைமேம்படுத்துவது, சுருக்கமற்ற நீர்புகாத துணிகளை உருவாக்குவது.
3. உயிர் காக்கும் மருந்துகளின் உற்பத்திமுறைகளை மேலும் திறன்மிக்கதாக மாற்றி அதன் பேரளவு மருந்து உற்பத்திக்கும் அனைவருக்கும் பேரளவு மருந்து உற்பத்திக்கும் அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் குறைவான விலைக்கும் கிடைக்கச் செய்வது.
4. கச்சா எண்ணையை சுத்திகரிக்கும் முறைகளை பாதுகாப்பாகவும் திறன்மிக்கதாகவும் மாற்றுவதன் மூலம் மின்சாரத்தையும் இதர
ஆற்றலையும் அளிப்பது.
5. சுற்றுச்சூழல் சீர்கேடுகள், பிரச்னைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றைக் களைய தீர்வுகளை கண்டறிவது.
வழங்கப்படும் படிப்புகள்
வேதிப் பொறியியல் துறையில் நுழைவதற்கு அத்துறையில் தகுந்த கல்வியும் பயிற்சியும் அவசியமாகும். வேதிப்பொறியியலில் நான்கு விதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
1. டிப்ளமோ படிப்பு: வேதி தொழில்நுட்பத்தில் இரண்டு வருட டிப்ளமோ படிப்புகளை பாலிடெக்னிக்குகள் வழங்குகின்றன.
2. இளநிலை பட்டப்படிப்பு: வேதிப்பொறியியலில் நான்கு வருட இளநிலை பட்டப்படிப்பை சில பொறியியல் கல்லூரிகள் வழங்கி வருகின்றன.
3. முதுநிலை பட்டப்படிப்பு: வேதிப் பொறியியலில் இரண்டு வருட முதுநிலை பட்டப்படிப்பை சில பொறியியல் கல்லூரிகள் வழங்கி வருகின்றன.
4. முனைவர் பட்டப்படிப்பு: வேதிப்பொறியியலில் ஆராய்ச்சியை அடிப்படையாகக்கொண்ட சிறப்புப் படிப்பு சில ஆராய்ச்சி நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. வேதிப்பொறியியல் துறையில் நுழைய பொதுவாக இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நீங்கள் வேலைக்கு அணுகும்போது வேலையளிப்பவர் உங்களது தொழில் நுட்பத் திறமைக்கு அப்பால் தகவல் தொடர்பு, குழுவாக வேலை செய்தல், பொதுவான பிசினஸ், புத்திக்கூர்மை போன்ற திறமைகளையும் கவனிப்பார். மேலும் விவரங்களுக்கு: www.studyguideindia.com
