சீர்திருத்தங்களை எதிர்க்கும் ஐ.ஐ.எம்., நிறுவனங்கள்
சீர்திருத்தங்களை எதிர்க்கும் ஐ.ஐ.எம்., நிறுவனங்கள்
UPDATED : ஏப் 18, 2011 12:00 AM
ADDED : ஏப் 18, 2011 11:09 AM
கல்வித் துறையில் சீர்திருத்தங்களை செய்யும் அவசரத்துடன் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதை அறிவோம். ஐ.ஐ.எம்.,எனப்படும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் சர்வதேச புகழ் பெற்றவை. இவற்றிலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது. ஆனாலும் இந்த சீர்திருத்தங்களை ஐ.ஐ.எம்.,கள் எதிர்த்து வருகின்றன.
கோல்கட்டாவிலுள்ள ஐ.ஐ.எம்., நிறுவனமானது இந்த சீர்திருத்தங்கள் ஐ.ஐ.எம்.,களை தனியார் மயமாக்கும் முயற்சியே என்று அதன் இணைய தளத்திலேயே கருத்து தெரிவித்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் தனியார் மயமாக்கல் என்பது தனது நோக்கமல்ல என்று தெரிவித்த பின்பும் ஐ.ஐ.எம்.,கள் தங்களது பயத்தை வெளியிட்டுள்ளன.
ரூ.20 கோடி நன்கொடையாகத் தரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐ.ஐ.எம்.,களின் மேனேஜ்மென்ட் குழுவில் 5 ஆண்டுகள் இடம் பெறலாம் என்ற மத்திய அரசின் புதிய யோசனையின் பின் ஐ.ஐ.எம்., இந்த பயத்தை வெளியிட்டுள்ளது. தனியாரும் முன்னாள் மாணவர்களும் கூட ரூ.5 கோடி தருவதன் மூலமாக நிர்வாகக் குழுவில் இடம் பெறலாம் என்னும் யோசனையும் கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளது.
