UPDATED : ஏப் 29, 2011 12:00 AM
ADDED : ஏப் 29, 2011 12:29 PM
சில ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் மிசோரம் ஆகியவை தற்போது கல்வியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வருவதாக 2011ம் ஆண்டுக்கான சென்சசின் முதனிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிசோரத்தின் கல்வியறிவு விகிதம் 91.58 ஆக உள்ளது. திரிபுராவின் கல்வி விகிதமானது 87.75 ஆக உள்ளது. கல்வியில் இந்தியாவில் எப்போதும் முன்னணியில் உள்ள கேரளாவிற்கு அடுத்தபடியாக இந்த மாநிலங்கள் இடம் பெற்றிருப்பது கல்வியாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
தேசிய கல்வியறிவு விகிதமான 74.04வை விட இந்த மாநிலங்கள் அதிக விகிதம் பெற்றிருப்பது தான் இதில் குறிப்பிடத்தக்கது. 2001 சென்சசில் 88.49என்பதாக இருந்து கல்வியறிவு விகிதமானது 91.58 ஆக மிசோரத்தில் அதிகரித்திருக்கிறது. பெண் கல்வியறிவு விகிதம் 89.4 ஆகவும் ஆண் கல்வியறிவு விகிதம் 93.72 ஆகவும் உள்ளது.
இந்த மாநிலத்தில் பெரும்பாலும் பரவியுள்ள கிறிஸ்த்தவ திருச்சபைகள் மற்றும் ஒய்.எம்.ஏ., எனப்படும் மிசோரம் இளைஞர் அமைப்பும் கல்வியறிவு அதிகரிப்பில் பெரும் பங்காற்றியுள்ளன. திரிபுராவின் கல்வி வளர்ச்சியில் உள்ளாட்சிகளின் பங்கு முக்கியமானது.
கிராம பஞ்சாயத்துக்கள், என்.ஜி.ஓ.க்கள் மற்றும் இது போன்ற அமைப்புகள் திரிபுராவின் கல்வியறிவு மேம்பாட்டில் பெரும் பங்காற்றியுள்ளன. 2009ம் ஆண்டு வரை திரிபுரா மாநிலம் தீவிரவாதத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் இந்தப்
போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு சென்சசின் படி 73,19 சதவீதமாக இருந்த இந்த மாநில கல்வியறிவானது 87.75சதவீதமாக தற்போது அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மிசோரமும் திரிபுராவும் இந்த அதீத கல்வி வளர்ச்சியை அடைந்திருந்தாலும் இதே பகுதியிலுள்ள அருணாச்சல பிரதேச மாநிலம் நாட்டின் மிக மோசமான கல்வி வளர்ச்சியடைந்த மாநிலங்களில் பீகாருக்கு அடுத்த 2ம் இடத்தைப் பெற்றுள்ளது.
