UPDATED : மே 02, 2011 12:00 AM
ADDED : மே 02, 2011 03:38 PM
தினமலர் நாளிதழ் சார்பில் திருப்பூரில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பது, எங்கு படிப்பது, எந்த துறையை தேர்ந்தெடுப்பது, வேலைவாய்ப்பு தரும் படிப்பு எது என்பது குறித்து மாணவர்களுக்கு எழும் சந்தேங்களுக்கு தீர்வாக ஆண்டுதோறும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்தாண்டு வழிகாட்டி நிகழ்ச்சி, கடந்த இரண்டு நாட்களாக திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்தது. எஸ்.ஆர்.எம்., பல்கலை, நேரு கல்வி நிறுவனங்கள், ஆர்.வி.எஸ்., கல்வி நிறுவனங்கள் மற்றும் சபோல் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்டது.
முதல் நாள் நடந்த கருத்தரங்குகளில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகள் குறித்து கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு ஆலோசனை வழங்கினார்.
ஐ.டி., - கம்ப்யூட்டர் துறையின் தற்போதைய போக்கு குறித்து டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த கணேஷ் மகாதேவன் விவரித்தார். சி.ஏ., - ஏ.சி.எஸ்., - ஐ.சி.டபிள்யூ., படிப்புகள் பற்றி பிரபல ஆடிட்டர் சேகர் ஆலோசனை வழங்கினார். பயோடெக், பயோ இன்ஜி., துறை குறித்து எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியர் வஹிதா ஹோப்பர் வழிகாட்டினார்.
ஹெல்த் சயின்ஸ் குறித்து விரிவுரையாளர் சுஜாதா மற்றும் கம்யூ., சயின்ஸ் துறை குறித்து பேராசிரியர் வடிவு ஆகியோர் விளக்கம் அளித்தனர். மொழிகள் கற்றல் குறித்து நகைச்சுவை பேச்சாளர் ஞானசம்பந்தம் பகிர்ந்து கொண்டார். மேலும், 60-80 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்கள் என்ன படிப்பது என்பது பற்றி கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது பற்றி வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வரும் பால்செல்லக்குமார் அறிவுரை வழங்கினார். வங்கி கடன் பெறுவது எப்படி ஸ்டேட் பாங்க் உயரதிகாரி விருதாச்சலம் ஆலோசனை வழங்கினார். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், எந்த படிப்பை தேர்வு செய்யலாம்? எதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது? என்பது பற்றி கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேசினார்.
கிராபிக்ஸ், அனிமேஷன் படிப்பு பற்றி விரிவுரையாளர் உன்னிகிருஷ்ணன் மற்றும் கடல்சார் படிப்பு பற்றி ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் பேராசிரியர் கேப்டன் சுரேஷ் நம்பியார் அறிவுரை வழங்கினர். கலை மற்றும் அறிவியல் படிப்பின் எதிர்காலம் பற்றி, எஸ்.ஆர்.எம்., பல்கலை விரிவுரையாளர் கஜேந்திரன், மீடியா துறை பற்றி எஸ்.ஆர்.எம்., பல்கலை போராசிரியர் ராஜேஷ் மற்றும் கல்லூரியில் வெற்றியாளர்களாக ஜொலிப்பது பற்றி, பேராசிரியர் சுல்தானா பர்வீன் பேசினர்.
ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் பங்கேற்றனர். திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்ஜி., நர்சிங், தொழிற்படிப்பு, கடல்சார் படிப்பு என பல்வேறு விதமான கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள், ஒரே கூரையின் கீழ் அமைக்கப்பட்டிருந்தது, மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது.
மாணவ, மாணவியர் கல்லூரி அரங்கிற்குச் சென்று, விரும்பும் பாடம் மற்றும் கட்டண விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். ஏராளமானோர், விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.
