UPDATED : நவ 28, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஜனவரி முதல் வாரத்தில் கல்லூரிகளை திறக்கலாம்’ என, சென்னை ஐகோர்ட்டில் சட்டக் கல்வி இயக்குனர், கல்லூரி முதல்வர் தெரிவித்தனர். இவ்வழக்கில் டிசம்பர் 1ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக, ‘முதல் பெஞ்ச்’ தெரிவித்தது.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டில் வக்கீல்கள் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். கல்லூரி, விடுதியை நேரில் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அட்வகேட் ஜெனரல் மாசிலாமணிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. பல பரிந்துரைகளுடன் அட்வகேட் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சீனியர் வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு, வக்கீல்கள் பால்கனகராஜ், சு.சீனிவாசன், ஞானசேகரன், அய்யாத்துரை, விஜயகுமார், ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன் உள்ளிட்ட வக்கீல்கள் சில பரிந்துரைகளை கூறினர்.
விசாரணையின் போது, தேர்வு நடத்துவது குறித்து நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா கேள்வி எழுப்பினார். கோர்ட்டில் இருந்த சட்டக் கல்வி இயக்குனர், அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர், ‘டிசம்பர் 10ம் தேதி முதல் தேர்வு நடத்தலாம். தேர்வுக்குப் பின் ஜனவரி முதல் வாரத்தில் கல்லூரிகளை திறக்கலாம்’ என்றனர்.
கல்லூரி, விடுதியை கண்காணிக்க தனியாக ஏன் ஒரு கண்காணிப்பாளரை நியமிக்கக் கூடாது என்றும் சட்டக் கல்லூரியில் ‘டீன்’ பதவியை உருவாக்கி அதில் நீதிபதி ஒருவரை நியமிக்கலாமா என்றும் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. பின், இவ்வழக்கில் டிசம்பர் 1ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக ‘முதல் பெஞ்ச்’ தெரிவித்தது.
