மதுரை பல்கலைக்கு ரூ. 10 கோடியில் புதிய ஆடிட்டோரியம்
மதுரை பல்கலைக்கு ரூ. 10 கோடியில் புதிய ஆடிட்டோரியம்
UPDATED : டிச 24, 2009 12:00 AM
ADDED : டிச 24, 2009 01:57 PM
மதுரை: “மதுரை காமராஜ் பல்கலையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஆடிட்டோரியம் கட்ட பழைய மாணவர்கள் சங்கம் மூலம் நிதி திரட்ட உள்ளதாக,” துணைவேந்தர் கற்பககுமாரவேல் தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டிச. 19ம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் பல்கலையில் புதிய ஆடிட்டோரியம் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள மு.வ.,அரங்கம் பெரிய அளவிலான கருத்தரங்குகள் நடத்துவதற்கு நவீன வசதிகளுடன் இல்லை. எனவே பல்கலையின் முன்னாள் மாணவர்கள் சார்பில் புதிய ஆடிட்டோரியம் ஒன்று நுழைவுவாயிலின் அருகில் கட்டப்பட உள்ளது. 10 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் இந்த கட்டடம் ஏ.சி., வசதி கொண்ட இரண்டு தளங்களுடன், 58 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இருக்கும்.
கட்டுமான பணி வருகிற 2010 ஜனவரியில் துவங்கி 2011 ஜனவரியில் முடிவடையும். கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் உள்பட பல்வேறு கூட்டங்களை நடத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் இக்கட்டடம் அமைக்கப்படும். இப்பல்கலை மற்றும் இணைவிப்பு கல்லூரிகளில் படித்த மாணவர்கள் பலர் பல்வேறு துறைகளிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடம் இருந்து இதற்கான நிதிதிரட்டப்படும்.
பழைய மாணவர்களை ஒன்றிணைத்து ஆக. 14ம் தேதி பழைய மாணவர் சங்க கூட்டம் நடத்தப்பட உள்ளது. நிதி திரட்டுவதற்கென துணைவேந்தர் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் செயற்குழு கூட்டம் வருகிற ஜன. 26ம் தேதி நடைபெறும். இதில் பூமிபூஜைக்கான நாள் குறித்து முடிவெடுக்கப்படும்.
பழைய மாணவர் சங்கத்திற்கென தனி வெப்சைட்டும் உருவாக்கப்பட உள்ளது. இதில் நிதியளிப்போர் பற்றிய விபரம் தினமும் ‘அப்டேட்’ செய்யப்படும். இந்த புதிய அரங்கம், ‘மதுரை காமராஜ் பல்கலை பழைய மாணவர் சங்க அரங்கம்’ என அழைக்கப்படும். பழைய மாணவர்கள் நிதியை, ‘மதுரை காமராஜ் பல்கலை பழைய மாணவர் சங்க அரங்கநிதி’ என்ற பெயரில் டிராப்ட் எடுத்து அனுப்பலாம். நிதி அளிப்போருக்கு வருமான வரிவிலக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன, என்றார்.
முன்னாள் மாணவர்கள் ஆதரவு: நிருபர்களிடம் பேட்டியளித்த துணைவேந்தர் கற்பககுமாரவேல், அங்கிருந்த பேராசிரியர்களை பார்த்து, இங்கிருப்போரில் பழைய மாணவர்கள் இன்றே நிதியை அளித்து துவக்கி வைக்கலாம் என்றார். முதல் ஆளாக எழுந்த சுற்றுச் சூழல் துறை தலைவர் முத்துச்செழியன் பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பதிவாளர் சிங்காரம், பேராசிரியர்கள் குணசேகரன், கதிரேசன் பத்தாயிரமும், பேராசிரியர் என்.ஆர்.மோகன் தான் ஓய்வு பெறும்போது கிடைக்கும் தொகையில் ஒரு லட்சமும், அமெரிக்காவில் பணியாற்றும் அசோக்குமார் 15 ஆயிரமும், லண்டனில் பணியாற்றும் சரவணன் என்பவர் 10 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக தெரிவித்தனர்.
