UPDATED : செப் 05, 2020 12:00 AM
ADDED : செப் 05, 2020 08:58 AM
சென்னை:
தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, உலர் உணவுப் பொருட்களுடன், மாதம் 10 முட்டைகள் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோய் பரவல் காரணமாக, அனைத்து பள்ளிகளுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சத்துணவு திட்டத்தில் பயனடையும் மாணவ - மாணவியருக்கு, சத்துணவு வழங்க முடியாததால், அரிசி மற்றும் பருப்பு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. ஜூன் முதல், பள்ளிகள் திறக்கப்படும் வரை, பள்ளி வேலை நாட்களுக்கு மட்டும், சத்துணவு திட்டத்தில் பயனடையும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, நாளொன்றுக்கு, 100 கிராம் அரிசி, 40 கிராம் பருப்பு. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 150 கிராம் அரிசி, 56 கிராம் பருப்பு, உலர் உணவாக வழங்க உத்தரவிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கியது போல், முட்டைகளையும், கொரோனா தொற்று காலம் முடியும் வரை வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, 34.04 லட்சம் பேருக்கு, உலர் உணவுப் பொருட்களுடன், முட்டைகளை வழங்கலாம் என, சமூக நல ஆணையர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதை ஏற்று, தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
தொடக்க மற்றும் உயர்நிலை மாணவர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருட்களுடன், இம்மாதம் முதல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை, மாதம் ஒன்றுக்கு, தலா, 10 முட்டைகள் வீதம் வழங்க, அனுமதி அளிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு பள்ளி கல்வித் துறை சார்பில், கல்வி உபகரணங்கள் வழங்கும்போதே, உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகளை வழங்க வேண்டும். சமூக நலத் துறை, ஏற்கனவே வெளியிட்டுள்ள நடைமுறைகளை கடைப்பிடித்து, உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகளை வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
