UPDATED : டிச 05, 2025 06:58 AM
ADDED : டிச 05, 2025 06:59 AM
சென்னை:
சென்னை பல்கலை நிலையை சீர்படுத்த அரசு உடனடியாக 1000 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிடுள்ள அறிக்கை:
சென்னை பல்கலையில், 65 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஐந்து ஜனாதிபதிகளை உருவாக்கிய சென்னைப் பல்கலையில், பாடம் நடத்தக் கூட ஆளில்லாத நிலையை, தி.மு.க., அரசு ஏற்படுத்தியுள்ளது. இரு ஆண்டுகளுக்கு மேலாக துணை வேந்தர் இல்லாததும், போதிய நிதி ஒதுக்கப்படாததும் தான், இந்த அவல நிலைக்கு காரணம்.
ஒரு காலத்தில், சென்னை பல்கலையில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு உபரி நிதி இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக பல்கலையின் வருவாய் குறைந்து, செலவுகள் அதிகரித்து விட்டன. இதனால், உபரி நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டு, வைப்பு நிதி வேகமாக குறைவதால், இன்னும் சில ஆண்டுகளில், பல்கலையை நடத்த முடியாத நிலை உருவாகும். சென்னை பல்கலையை சீரழித்த பாவத்திற்கு, பரிகாரம் தேடும் வகையில், உடனடியாக, 1,000 கோடி ரூபாயை தி.மு.க., அரசு ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

