UPDATED : நவ 18, 2023 12:00 AM
ADDED : நவ 18, 2023 10:11 AM
சென்னை:
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், முதல் கட்டமாக, விஜய் நுாலகம&' இன்று(நவ.,18), 11 இடங்களிலும், இரண்டாம் கட்டமாக, வரும் 23ம் தேதி, 21 இடங்களிலும் திறக்கப்படுகிறது.இதுகுறித்து அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கத்தின் தலவர் புஸ்ஸி ஆனந்து அறிக்கை:
நடிகர் விஜய் உத்தரவின்படி, ஏற்கனவே, விஜய் பயிலகம் திட்டத்தை தொடர்ந்து, மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் பயன் பெறும் வகையில், விஜய் நுாலகம் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில், தற்போது முதல்கட்டமாக, விஜய் நுாலகம் திட்டத்தை இன்று காலை 10:35 மணிக்கு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில், தாம்பரம் தொகுதியில் துவக்கி வைக்கிறேன்.அதை தொடர்ந்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை விஜய் மக்கள் சார்பில், பல்லாவரம் தொகுதியில் துவக்கி வைக்கிறேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மூன்று இடங்களிலும், அரியலுார், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வட சென்னை கிழக்கு, வட சென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலுார் தொண்டரணி ஆகிய மாவட்டங்களை சேர்த்து, 11 இடங்களிலும் விஜய் நுாலகம் திறக்கப்படவுள்ளது.இரண்டாம் கட்டமாக, வரும் 23ம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்தில், ஐந்து இடங்கள், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்கள், ஈரோடு மாவட்டத்தில், மூன்று இடங்கள், தென்காசி மாவட்டத்தில், இரு இடங்கள், சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து, 21 இடங்களிலும் விஜய் நுாலகம் திறக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
