குழந்தைகளுக்கான வயது வரம்பை 14ல் இருந்து 18 ஆக உயர்த்த வலியுறுத்தல்
குழந்தைகளுக்கான வயது வரம்பை 14ல் இருந்து 18 ஆக உயர்த்த வலியுறுத்தல்
UPDATED : டிச 30, 2014 12:00 AM
ADDED : டிச 30, 2014 12:21 PM
சென்னை: குழந்தைகளுக்கான வயது வரம்பை 14ல் இருந்து 18 ஆக உயர்த்தும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என, குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசார இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
ஐ.நா., குழந்தைகள் உரிமை மீதான உடன்படிக்கை ஏற்படுத்தி, 25 ஆண்டுகள் ஆகிறது. இதில், இந்தியா கையெழுத்திட்டாலும், அரசியல் சட்டத்தில், குழந்தைகளுக்கான வயது வரம்பு 14 ஆகவே உள்ளது. இதை 18 வயதாக உயர்த்தக் கோரி, குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசார இயக்கம், நாடு முழுவதும் நடந்து வருகிறது.
மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பேசியதாவது: அரசியல் அமைப்புச் சட்டத்தில், குழந்தைகள் வயது வரம்பு, 14 ஆகவும், சிறார் குற்றச் செயல்களில் 18 வயதாகவும், விபசார தடுப்பு சட்டத்தில் 16 வயதாகவும் உள்ளது; இந்த குளறுபடிகளை தீர்க்க வேண்டும். நாட்டில், 6.5 கோடி குழந்தை தொழிலாளர் உள்ளனர். இதைத் தடுக்க சட்டங்கள் இருந்தும், சரியாக செயல்படுத்தப்படவில்லை.
முந்தைய மத்திய அரசு, 18 வயதுக்கு கீழ் உள்ளோர் குழந்தைகள் என, குழந்தைகளுக்கான தேசிய கொள்கையில் அறிவித்தது. மத்திய அரசு, 18 வயதுக்கு கீழ் உள்ள அனைவரும் குழந்தைகள் என, சட்டத்திருத்தம் செய்வதோடு, பிளஸ் 2 வரை தரமான, இலவச கட்டாயக் கல்வி கிடைக்கச் செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
