மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்களை 15 நாட்களுக்குள் திருப்பி கொடுக்க உத்தரவு
மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்களை 15 நாட்களுக்குள் திருப்பி கொடுக்க உத்தரவு
UPDATED : ஆக 06, 2014 12:00 AM
ADDED : ஆக 06, 2014 10:53 AM
சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகள் வசம் உள்ள, மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்களை, 15 நாட்களுக்குள் திருப்பி கொடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுகலை படிப்பு முடித்த 60க்கும் மேற்பட்டோர், உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.
கல்லூரி வசம் உள்ள, பள்ளி படிப்பு சான்றிதழ்கள், எம்.பி.பி.எஸ்., பட்டத்துக்கான சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், மருத்துவ பதிவு சான்றிதழ், முதுகலை பட்டம், நன்னடத்தை, மாற்று சான்றிதழ் ஆகியவற்றை தங்களுக்கு வழங்க கோரி, இம்மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்களை, நீதிபதி சத்திய நாராயணன் விசாரித்தார். அரசு தரப்பில்கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி, மருத்துவ கல்வி இயக்குனரின் கடிதத்தை தாக்கல் செய்தார். அதில், படிப்பை முடித்தவர்களின் சான்றிதழ்களை திருப்பிக் கொடுக்க, உத்தரவிடப்பட்டிருந்தது.
சான்றிதழ்களை கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், சிறிது கால அவகாசம் வேண்டும் என, கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி கோரினார். இதையடுத்து, 15 நாட்களுக்குள், சான்றிதழ்களை மாணவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என, நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார்.
