துாத்துக்குடியில் கடல்சார் திட்டங்கள் ரூ.18,400 கோடி மதிப்பில் தயாராகிறது
துாத்துக்குடியில் கடல்சார் திட்டங்கள் ரூ.18,400 கோடி மதிப்பில் தயாராகிறது
UPDATED : அக் 23, 2026 03:01 PM
ADDED : அக் 23, 2026 03:02 PM
துாத்துக்குடி:
துாத்துக்குடியில் கிட்டத்தட்ட 18,400 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்சார் திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலர் விஜயகுமார், துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆய்வு செய்தார்.
பசுமை ஹைட்ரஜன் முன்னோடி திட்ட ஆலை, காற்றாலை மின் வசதிகள் உள்ளிட்டவற்றையும் விஜயகுமார் நேரில் பார்வையிட்டார்.
இது குறித்து துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் கூறியதாவது:
துாத்துக்குடி துறைமுகத்தில் 18,400 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்சார் உட்கட்டமைப்பு திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இதன் வாயிலாக, நாட்டின் சர்வதேச வர்த்தகம், தொழில் வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்தி பொருளாதாரத்தில் தென் தமிழகத்தின் பங்கு ஆகியவை மேலும் வலுப்பெறும்.
அத்துடன் 17,167 கோடி ரூபாய் மதிப்பிலான வெளித்துறைமுக மேம்பாட்டு திட்டம், 520 கோடி ரூபாய் மதிப்பிலான 7ம் எண் தளத்தில் அமைக்கப்படும் சரக்கு பெட்டக முனையம் மற்றும் 750 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்சார் காற்றாலை முனையம் ஆகிய மூன்று திட்டங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
