வெற்றிக்காக காத்திருக்கிறேன் பிளஸ் 2 மாணவர்களுக்கு கலெக்டர் கடிதம்
வெற்றிக்காக காத்திருக்கிறேன் பிளஸ் 2 மாணவர்களுக்கு கலெக்டர் கடிதம்
UPDATED : பிப் 27, 2026 04:38 PM
ADDED : பிப் 27, 2026 04:38 PM
திண்டுக்கல்:
மார்ச் 2ல் துவங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 21 ஆயிரத்து 419 மாணவர்களுக்கு கலெக்டர் சரவணன் தம்பி, தங்கைளின் வெற்றிக்காக காத்திருக்கிறேன் என வாழ்த்துக் கூறி தனித்தனியாக கடிதம் அனுப்பி உள்ளார்.
பிப்., 16ல் தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களிடம் காணொலிக் காட்சி வாயிலாக கலெக்டர் கலந்துரையாடி தேவையான அறிவுரைகள், ஆலோசனைகளை வழங்கினார். இதை தொடர்ந்து தற்போது 21,419 மாணவர்களுக்கு கலெக்டர் தனித்தனியாக எழுதிய வாழ்த்து கடிதத்தில், பள்ளிப் படிக்கட்டுகள் வெற்றிச் சிகரத்தை நோக்கி உங்களை நகர்த்தும் தருணம் இது.
இத்தேர்வு பொதுத் தேர்வு மட்டுமல்ல. உங்கள் வாழ்வின் கலங்கரை விளக்கமாகும். நம்பிக்கையின் சின்னம். உழைப்பின் அடையாளம்.
இதை மனதில் நிறுத்துங்கள். நம்பிக்கையுடன் படியுங்கள். உற்சாகத்துடன் செல்லுங்கள், தேர்வை எழுதுங்கள். மறவாமல் தாய், தந்தை, ஆசிரியர்களின் ஆசி பெற்றுச் செல்லுங்கள்.
கல்வி மட்டுமே எவராலும் அழிக்க முடியாத ஆயுதம் என குறிப்பிட்டு, இப்படிக்கு தம்பி, தங்கைளின் வெற்றிக்காக காத்திருக்கிறேன் உங்கள் கலெக்டர் அண்ணன் என உருக்கமாக எழுதி கையெழுத்திட்டு அனுப்பி உள்ளார்.
மேலும் தபால் அட்டையயில் கற்கை நன்றே, கற்கை நன்றே, முயற்சி திருவினையாக்கும் என அச்சிடப்பட்டிருந்தது.

