ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் 20 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்பு
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் 20 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்பு
UPDATED : நவ 19, 2025 07:31 AM
ADDED : நவ 19, 2025 07:32 AM
கோவை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 60க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து உள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
இதில், கோவையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 20 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்றனர். அதேபோல், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். குறிப்பாக கோவை நகரம், தொண்டாமுத்தூர், காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் பணிபுரியும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம், சூலூர், அன்னூர், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போதிலும், பள்ளிகள் எவ்விதத் தடங்கலுமின்றி வழக்கம்போல் செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகளைக் கையாளத் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்ததாக கூறினர்.
தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில், அடுத்தக்கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.

