எஸ்.எம்.எஸ்., மூலம் காப்பி: 22 மாணவர்கள் மனு தள்ளுபடி
எஸ்.எம்.எஸ்., மூலம் காப்பி: 22 மாணவர்கள் மனு தள்ளுபடி
UPDATED : நவ 10, 2009 12:00 AM
ADDED : நவ 10, 2009 11:29 AM
இம்மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. வேதாரண்யத்தில் மாதா ஆசிரியர் பயிற்சி பள்ளி உள்ளது. இதில், ‘டிப்ளமோ’ படிக்கும் மாணவர்கள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்வு எழுதினர். தேர்வு துவங்கும் முன், தேர்வு அறைக்குள் மொபைல் போன்களை கொண்டு வரக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. அதை மீறி, மாணவர்கள் மொபைல் போனை எடுத்துச் சென்றனர்.
மாணவர்களுக்கு மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., மூலம் விடைகள் வருவதாக வந்த தகவலை அடுத்து, பறக்கும் படையினர் அந்த மையத்திற்கு வந்தனர். மாணவர்களிடம் இருந்த மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மறுநாள் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மாணவர்களிடம் மொபைல் போன் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்வுத்துறை இணை இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின், மாணவர்களுக்கு தேர்வு எழுத வழங்கப்பட்ட அனுமதியை அரசு ரத்து செய்தது. மேலும், ஓராண்டுக்கு எழுத்துத் தேர்வு எழுத தடை விதித்தது. மாணவர்கள் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், 22 மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும், தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என அவர்கள் கோரினர்.
இம்மனுவை, நீதிபதி சந்துரு விசாரித்தார். அரசு தரப்பில் அரசு வக்கீல் மணிபாரதி வாதாடினார். நீதிபதி சந்துரு பிறப்பித்த உ<த்தரவு:
இந்த வழக்கில், கூறப்பட்டுள்ள தகவல்களை பார்க்கும் போது, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.,’ படத்தில் கதாநாயகன் பின்பற்றும் நடைமுறையை காட்டுவதாக உள்ளது. சினிமா படங்களை பார்த்து இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகிறதா அல்லது நடைமுறை வாழ்க்கையில் உள்ள உண்மைச் சம்பவங்களை தான் சினிமாக்கள் காட்டுகிறதா என்பது ஆச்சரியமாக உள்ளது.
இந்த வாதம் தொடரலாம். ஆனால், மனுதாரர்களின் நடவடிக்கைகளை பார்க்கும் போது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. வடமாநிலங்கள் சிலவற்றில் கத்தி, துப்பாக்கியை வைத்துக் கொண்டு தேர்வு எழுதினர். தற்போது உயர் தொழில் நுட்பத்திற்கு மாணவர்கள் மாறியுள்ளனர். இந்த மாணவர்கள் தான் எதிர்கால ஆசிரியர்களாக ஆகப் போகின்றனர் என்பதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது.
காலை 11.30 மணிக்கு பறக்கும் படையினர் வந்து மொபைல் போன்களை கைப்பற்றியுள்ளனர். கடிதத்தில் பறக்கும் படையினர், தலைமை கண்காணிப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கையெழுத்து உள்ளது. எனவே, வெற்றுத்தாளில் கையெழுத்திட்டதாக மாணவர்கள் கூறும் குற்றச்சாட்டு சரியல்ல.
மொபைல் போன்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்து வைத்திருந்ததாகவும், மேற்பார்வையாளர் கேட்டும் கொடுக்கவில்லை என்றும் மனுதாரர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். பறக்கும் படையினர் வந்த பிறகு தான், மொபைல் போன்கள் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிப்பதற்கு முன், தேர்வு மையத்திற்குள் நடந்த சம்பவங்களை முழுமையாக அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர். தேர்வு துவங்குவதற்கு முன், 40 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் வந்த பின், 60 மொபைல் போன்களாக உயர்ந்துள்ளது.
போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில், மாணவர்களிடம் மொபைல் போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வுத் துறையின் வரலாற்றிலேயே மொபைல் போன்கள் மூலம் காப்பியடித்த சம்பவம் இதுவரை நடக்கவில்லை என கூறப்படுகிறது. சில மாணவர்களின் விடைத்தாள்களை பார்க்கும் போது, தவறான விடைகளை அடித்து விட்டு, அதன் மேல் சரியான விடைகளை எழுதியுள்ளனர். எனவே, அவர்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் காப்பி அடித்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, மொபைல் போன்களை வைத்திருப்பதற்கு அதிகாரிகள் எச்சரித்ததாக மாணவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அரசிடம் அளித்த விளக்கத்திலும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, தண்டனை விதிப்பதற்கு இதுவே போதுமானது. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
