பள்ளிகளில் செக்ஸ் தொல்லை: 3 தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!
பள்ளிகளில் செக்ஸ் தொல்லை: 3 தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!
UPDATED : நவ 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: சக ஆசிரியைகள் மற்றும் மாணவர்களுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த மூன்று தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவிகளைத் தொட்டு தொட்டுப் பேசி தகாத உறவுகொள்ள முயற்சித்தது, மாணவர்களிடம் ‘ஹோமோ செக்ஸ்’ வைத்துக்கொள்ள முயற்சித்தது போன்ற பல்வேறு புகார்களின் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
மாணவர்களிடம் ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் கற்றுத்தர வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்கள் அவ்வப்போது வில்லன்களாக அவதாரம் எடுத்து விடுகின்றனர். சக ஆசிரியைகளிடமே தவறாக நடக்க முயற்சித்தல், மாணவிகளிடம் செக்ஸ் விளையாட்டுக்களை நடத்துவது போன்றவற்றில் ஒருசில, ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களின், நடவடிக்கைகள் அத்துமீறும்போது பிரச்னை வெடிக்கிறது.
இந்த வரிசையில், மூன்று தலைமை ஆசிரியர்களின் காம லீலைகள் வெளிச்சத்திற்கு வந்ததால், கொதித்துப்போன மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஈரோடு: புன்செய்ப் புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம். இவர், எப்போதும் போதையில் மிதந்தபடி தான் பள்ளிக்கு வருவாராம். பள்ளிக்கு வந்த பிறகு மேலும் போதையை ஏற்றிக்கொள்ள, மாணவர்களையே மது வாங்கி வரும்படி செய்துள்ளார்.
மதுவை வாங்கிவரும் மாணவர்களை தன்னுடன் சேர்ந்து குடிக்குமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார். போதை தலைக்கேறிய நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் ‘ஹோமோ செக்ஸ்’ வைத்துக்கொள்ளவும் முயற்சித்திருக்கிறார். தலைமை ஆசிரியரின் இந்த காமக்களியாட்டங்கள் பல மாதங்களாக நடந்து வந்திருக்கின்றன. பள்ளியில் நடக்கும் கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
ஒரு கட்டத்தில், ஆறுமுகத்தின் தொல்லை அதிகரிக்கவே, அவரின் லீலைகள் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. கொதித்துப்போன மக்கள், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். இந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, பள்ளிக் கல்வித்துறைக்கு அறிக்கையை அனுப்பினர். இதனடிப்படையில், தற்போது ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாகை: ஆக்கூர் அரசு மகளிர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரான முருகேசன், மாணவிகளிடம் தனது விஷமத்தை கக்கியிருக்கிறார். ‘பாடம் நடத்துகிறேன்’ என்ற சாக்கில், மாணவிகளை தொட்டு தொட்டுப் பேசி இம்சைப்படுத்தியுள்ளார்.
பள்ளியில் பயிற்சி வகுப்புகளை நடத்தவந்த பி.எட்., மாணவிகளையும் முருகேசன் விட்டு வைக்கவில்லை. அவர்களிடமும் தனது லீலைகளை அரங்கேற்றியிருக்கிறார். மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டம் நடத்தி, பிரச்னையை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், இவரும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்.
விழுப்புரம்: கோட்டகுப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் குணசீலன். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு தொடர்ச்சியாக செக்ஸ் டார்ச்சர் கொடுப்பது இவரது ‘வேலை.’ படிப்பை முடித்துவிட்டு டி.சி., வாங்க வரும் மாணவிகளை அதிக நேரம் நிற்கவைத்து ‘ஜொள்’ விட்டுள்ளார். ஆசிரியைகளின் ஓய்வு அறைக்குச் சென்றும் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள், அதிகாரிகளின் விசாரணையில் ஊர்ஜிதம் செய்யப்பட்டதால் குணசீலனையும் சஸ்பெண்ட் செய்து பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
செக்ஸ் விவகாரத்தில் சிக்கும் ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்வது மட்டுமில்லாமல், மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு ‘பாடம்’ கற்பிக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த பிரச்னை முடிவுக்கு வரும். இல்லாவிட்டால், சல்லாப ஆசிரியர்ளை என்றுமே களையெடுக்க முடியாது.
