UPDATED : ஜூன் 10, 2026 01:22 PM
ADDED : ஜூன் 10, 2026 01:26 PM
புதுச்சேரி:
புதுச்சேரியில் பிரஞ்சு மொழியை 'ஆர் 3' வகையில் பிராந்திய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என புதுச்சேரி சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
சங்க தலைவர் அரவிந்தன் அறிக்கை:
2026 - 27ம் கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ., அமல்படுத்தியுள்ள மும்மொழிக் கொள்கையின் கீழ், 6ம் வகுப்பில் இருந்தே இரு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதனால், புதுச்சேரியில் பல ஆண்டுகளாக ஆங்கிலம், தமிழ், பிரஞ்சு என்ற மும்மொழி கல்வியை பின்பற்றி வந்த மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரியில் பிரஞ்சு மொழிக்கு, இந்திய பிராந்திய மொழிகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். பிரஞ்சு மொழியை தொடர்ந்து கற்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
1956ம் ஆண்டு இந்தியா - பிரான்ஸ் இடையேயான உடன்படிக்கை, பிரஞ்சு மொழி, கலாசாரம், கல்வி நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். பிரஞ்சு மொழி என்பது ஒரு விருப்ப மொழி அல்ல; அது புதுச்சேரி மாணவர்களின் பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் சட்டப்பூர்வ உரிமை ஆகும்.
தற்போதைய கொள்கையின் கீழ், மாணவர்கள் ஆங்கிலம் (ஆர் 1), தமிழ் (ஆர் 2) மற்றும் ஒரு இந்திய மொழியாக இந்தியை கற்க வேண்டிய நிலை உருவாகியிருப்பது மறைமுகமான இந்தி திணிப்பு ஆகும்.
இது குறித்து சி.பி.எஸ்.இ., வெளியிட்ட சுற்றறிக்கையில், 44 தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கொண்ட இச்சங்கம், பிரஞ்சு மொழியை ஆர் 3 வகையில் பிராந்திய மொழியாக அங்கீகரிக்காவிட்டால், 1956ம் ஆண்டு உடன்படிக்கையின் சட்டப்பூர்வ அம்சங்களை உரிய மன்றங்களில் எழுப்ப நேரிடும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
