UPDATED : ஜூலை 07, 2023 12:00 AM
ADDED : ஜூலை 07, 2023 10:27 AM
சென்னை:
பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி அரசு பள்ளிகளில் தினமும் 30 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில்லை. இவர்களை, போதைப் பொருள் விற்பனை, திருட்டு, வழிப்பறியில் ஈடுபட வைப்பதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. சமூக பாதுகாப்பு, கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 30,000 மேற்பட்ட வீடுகள் உள்ளன. கல்வி வசதிக்காக, நான்கு தொடக்கப் பள்ளிகள், இரு உயர்நிலை மற்றும் ஒரு மேல்நிலை என, ஏழு அரசு பள்ளிகள் உள்ளன. இதில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இங்கு ஐ.டி.ஐ., மற்றும் அரசு கல்லுாரி உள்ளன. பெரும்பாலான மாணவ - மாணவியரின் பெற்றோர், சாதாரண கூலி வேலை செய்பவர்கள். அன்றாட வருமானத்தை நம்பி பிழைப்பு நடத்துகின்றனர். பிள்ளைகள் பள்ளி செல்லும்முன் வேலைக்கு புறப்பட்டு, இரவு வீடு திரும்புகின்றனர்.கண்காணிக்க இதர உறவுகள் இல்லாத வீடுகளில், பல மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில்லை. இதனால் மேற்கண்ட பள்ளிகளில் தினமும் 25 - 30 சதவீத பேர் ஆப்சென்ட் ஆகின்றனர். தொடக்கப்பள்ளியுடன் படிப்பை நிறுத்தியோர் 20 சதவீதம் பேர் உள்ளனர் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.நகர்ப்புற வாழ்விட குடியிருப்பைச் சேர்ந்தோர் கூறியதாவது:
திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் மாணவர்களை ஈடுபடுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர். அவர்களின் மூளை சலவையில் கஞ்சா விற்பனை, வழிப்பறியில் தயங்காமல் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். வீட்டில் இருந்து சீருடையில் கிளம்பும் அவர்கள், மறைவான பகுதியில் கலர் சட்டையை மாற்றி, குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் விளையாடுவது, ஊர் சுற்றுவது என இருக்கின்றனர். அதேவேளையில், பிள்ளைகள் பள்ளிக்கு சென்றனரா, அவர்களின் படிப்பு, ஒழுக்கம் குறித்து ஆசிரியர்களிடம் பெற்றோர் விசாரிப்பதும் இல்லை.குடியிருப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு பள்ளிகள் அமைத்து கொடுத்தும், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது, அவர்களின் எதிர்காலம் பாழாகும் அவலம் உள்ளது.சில குடும்பங்களில், சரியாக வழிகாட்டுதல் இல்லாமல், தொடர்ந்து படிக்க விருப்பம் இருந்தும், சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி, வேலைக்கு செல்லும் மாணவியரும் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பெரும்பாக்கம், செம்மஞ்சேரி குடியிருப்பில், 35 என்.ஜி.ஓ.,க்கள் செயல்படுகின்றன. இவர்கள், பள்ளி, கல்லுாரி செல்வோருக்கு உதவுகின்றனரே தவிர, பள்ளி செல்லா மாணவ - மாணவியர் மீது சிறப்பு கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், சமூக பாதுகாப்பு துறை, கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளி செல்லாத மாணவ - மாணவியருக்கு, படிப்பின் அவசியம் குறித்து புரிய வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விழிப்புணர்வு இல்லை
பல குடும்பங்களில், முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகும் சூழலில், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட நகர்ப்புற வாழ்விட பகுதிகளில் பலர், பள்ளிப் படிப்பே முடிக்காத நிலை ஏற்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், போலீசார், தன்னார்வ அமைப்புகளை உடைய குழுக்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து மாணவர்களும் பள்ளி செல்வதை உறுதி செய்ய வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்கவனம் தேவை
பெற்றோர் கண்காணிப்பு, கண்டிப்பு இல்லாத மாணவர்கள், படிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. இவர்களை, சிலர் தவறான செயலில் ஈடுபடுத்தி அவர்கள் எதிர்காலத்தை பாழாக்குகின்றனர். பெற்றோரும், பிள்ளைகள் குறித்து கவலை கொள்வதில்லை. அவர்களிடம் சொன்னாலும் புரிவதில்லை; எங்களிடமே சண்டைக்கு வருகின்றனர். படிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு இல்லை. அனைவரும் பள்ளிக்கல்வி முடித்துள்ளனர் என்ற நிலையை உருவாக்க, தன்னார்வ அமைப்புகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
