திறனாய்வு தேர்வு உதவித்தொகை 34 ஆண்டாக உயர்த்தப்படாத அவலம்
திறனாய்வு தேர்வு உதவித்தொகை 34 ஆண்டாக உயர்த்தப்படாத அவலம்
UPDATED : நவ 25, 2025 08:40 AM
ADDED : நவ 25, 2025 08:43 AM

சேலம்:
ஊரக திறனாய்வு தேர்வுக்கான உதவித்தொகை, 34 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல், ஆண்டுக்கு, 1,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், தேர்வில் பங்கேற்க மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது.
தமிழகத்தில், ஊரக பகுதிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கவும், அவர்களை போட்டி தேர்வுக்கு தயார் செய்யவும், 1991ல், ஊரக திறனாய்வு தேர்வு துவக்கப்பட்டது. இந்த தேர்வில், கிராம பகுதிகளில் உள்ள பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.
இத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெறும், 50 மாணவர்கள், 50 மாணவியர் என மாவட்டத்திற்கு, 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு, 1,000 ரூபாய் என, பிளஸ் 2 முடிக்கும் வரை நான்காண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டம் துவங்கிய போது வழங்கப்பட்ட, 1,000 ரூபாய் உதவித்தொகை, 34 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதால், இத்தேர்வில் பங்கேற்க, மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்களையும், போட்டி தேர்வுக்கு தயார் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஊரக திறனாய்வு தேர்வு திட்டம் துவங்கப்பட்டது.
அப்போது, 1,000 ரூபாய் என்பது உயர் மதிப்பாக இருந்ததால், மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கவும், தேர்வுக்கு உழைக்கவும் தயாராக இருந்தனர்.
பணத்தின் மதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில், 34 ஆண்டுகளாக உதவித்தொகை உயர்த்தப்படவில்லை. தற்போது, வேறு ஊருக்கு சென்று தேர்வெழுத வேண்டும், பரிசுத்தொகையோ, 1,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும் என்பதால், மாணவர்கள் விண்ணப்பிக்க முன் வருவதில்லை.
ஆண்டுக்கு ஆண்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கல்வி அலுவலர்களிடமிருந்து தப்பிக்க, மாணவர்களை கட்டாயப்படுத்தி, விண்ணப்பிக்க செய்ய வேண்டியுள்ளது.
கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்தக்கூடிய இத்திட்டத்துக்கான உதவித்தொகையை, தமிழக அரசு உடனடியாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

