உதவி பேராசிரியர் பணியில் 4,000 பேரை நியமிக்க தேர்வு
உதவி பேராசிரியர் பணியில் 4,000 பேரை நியமிக்க தேர்வு
UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 09:25 PM
சென்னை:
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பதவியில், 4,000 பேரை நியமிக்க தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, ஆங்கிலத்தில், 656 இடங்களில் புதிய நியமனம் மேற்கொள்ளப்படுகிறது.தமிழக உயர்கல்வி துறை கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பதவியில், 4,000 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், ஆக., 4ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.இந்த தேர்வுக்கு, இந்த மாதம், 28ம் தேதி முதல், ஏப்., 29 வரையில், https://trb.tn.gov.in/ என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். புதிய நியமனத்துக்கு, 65 பாடங்களுக்கு காலியிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஆங்கிலத்துக்கு, 656; தமிழுக்கு, 569 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.கணிதம், 318; வணிகவியல், 296; வேதியியல், 263; கணினி அறிவியல், 244; இயற்பியல், 226; பொருளியல், 161; விலங்கியல், 132; வரலாறு, 126; தாவரவியல், 115; புள்ளியியல், 80; புவியியல், 78; கணினி பயன்பாடு, 76; கல்வியியல், 45; அரசியல் அறிவியல், 37; மனை அறிவியல், 36; நுண் உயிரியல், 32; பெரு நிறுவன செயலர், 30; காட்சி தொடர்பு பாடத்தில், 29 காலியிடங்கள் உள்ளன.