UPDATED : அக் 29, 2014 12:00 AM
ADDED : அக் 29, 2014 10:36 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் 48வது பட்டமளிப்பு விழா கவர்னர் ரோசையா தலைமையில் நடந்தது. துணைவேந்தர் கல்யாணி முன்னிலை வகித்தார்.
மத்திய மின்வேதியியல் ஆய்வக இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை பட்டமளிப்பு உரையாற்றி பேசுகையில், "இளைஞர் சக்தி மிகுந்த நம்நாடு மனித வளத்தில் முன்னிலையில் உள்ளது. 30 ஆண்டுகளை ஒப்பிடும்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் குறிப்பிடும் வளர்ச்சியை நாம் எட்டிள்ளோம். இருப்பினும் தொழில்நுட்ப பயன்பாட்டில் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் முன்னிலையில் உள்ளன. பல்கலைகள் அறிவுசார்ந்த கல்வி மற்றும் சமுதாயத்தை உருவாக்கும் மையங்களாக விளங்க வேண்டும்" என்றார்.
உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் பேசுகையில், "தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் உயர்கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக விஷன் 2023 திட்டம் உருவாக்கப்பட்டது. 74 சதவீதமாக இருந்த கல்விஅறிவு 80.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை தற்போது 38 சதவீதம் அதிகரித்துள்ளது. பட்டம் பெற்றவர்கள் வேலையை தேடாமல், வேலை வாய்ப்புகளை அளிக்கும் தொழில்முனைவோர்களாக மாற வேண்டும்" என்றார். 342 பி.எச்.டி.,க்கள் உட்பட 58,060 பேர் பட்டங்கள் பெற்றனர்.

