UPDATED : ஆக 04, 2014 12:00 AM
ADDED : ஆக 04, 2014 12:56 PM
திண்டுக்கல்: கணிதத்துறையில், கணித வடிவமைப்பு ஆராய்ச்சிக்காக, காந்திகிராமம் பல்கலைக்கு, பல்கலை மானிய குழு (யூ.ஜி.சி.,) ரூ.80 லட்சம் நிதி வழங்கியுள்ளது.
பல்கலை மானிய குழு, சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ், பன்னாட்டு அளவில் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பல்கலைகளுக்கு நிதியுதவி அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், காந்திகிராமம் பல்கலை கணிதத்துறைக்கு, ஏற்கனவே 2 கட்டங்களாக மொத்தம் ரூ.87 லட்சம் வழங்கப்பட்டன.
இந்த நிதி மூலம் 223 ஆராய்ச்சி கட்டுரைகளை கணிதத்துறை சமர்ப்பித்து உள்ளது. தொடர்ந்து கணித வடிவமைப்பு தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளது. இதற்காக, பல்கலை மானிய குழு ரூ.80.35 லட்சம் வழங்கியுள்ளது.
ஆராய்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் கூறுகையில், "யூ.ஜி.சி., ஒதுக்கிய நிதியில், ஆய்வக உபகரணங்கள் வாங்குதல், கருத்தரங்குகள் நடத்துதல் போன்றவற்றுக்கு செலவிடப்படும். ஆராய்ச்சியில் ஈடுபடும் 2 மாணவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.18 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்" என்றார்.
