UPDATED : ஆக 17, 2011 12:00 AM
ADDED : ஆக 17, 2011 03:24 PM
KPO எனப்படும் Knowledge Processing Outsourcing துறையானது, இன்றைய நிலையில், இந்தியாவில் பெரியளவில் வளர்ந்துவரும் ஒரு துறையாக உள்ளது.
இத்துறையில் ஒருவர் வெற்றிபெற, தரவுகளை அவுட்சோர்சிங் செய்வதில் திறமையையும், தெளிவான தகவல் அறிவையும் கொண்டிருக்க வேண்டும். சிறப்பான மொழியறிவும், தன்னம்பிக்கையும் முக்கியம். இத்துறை பணியானது, BPO பணியை ஒத்தது. ஏனெனில் இதிலேயும் குழுவாக பணிபுரிய வேண்டும், தவிர, இரவு மற்றும் பகல் நேரங்களில் மாறி மாறி பணிபுரிய வேண்டியிருக்கும்.
இந்திய தொழில்துறைக்கு KPO புதிது என்பதால், இப்பணிக்கு தேவைப்படும் பயிற்சிகளை வழங்குவதற்கான பாடத்திட்டங்களை கல்வி நிறுவனங்கள் வகுக்கவில்லை. இருந்தாலும், பல கல்வி நிறுவனங்கள், டிப்ளமோ நிலையில், குறுகிய கால ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளையும், பயிற்சி திட்டங்களையும் வழங்குகின்றன. இவற்றில் ஒருவர் சேர்வதற்கு, அவர் ஏதேனும் ஒரு படிப்பில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையின் மூலமாக இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இத்துறை தொடர்புடைய படிப்பை முடித்தப் பிறகு ஒருவர், KPO துறையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மேம்பட்ட வலைப் பயன்பாடுகள், நிதி ஆலோசனை மற்றும் சேவைகள், வணிக மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு, வர்த்தக மற்றும் சந்தை ஆராய்ச்சி, சட்ட ரீதியான சேவைகள், பயிற்சி மற்றும் ஆலோசனை மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பல பிரிவுகளில் பணியாற்றலாம்.
இந்தியாவில் பணியாற்றி போதிய அனுபவம் பெற்றபிறகு, விரும்பினால், வெளிநாட்டிலும் பணியாற்றலாம். KPO துறையானது இந்தியாவில் விரைவாக வளர்ச்சியடையக் காரணம், அத்துறையில் கிடைக்கும் கவர்ச்சிகரமான சம்பளம்தான். ஆரம்ப நிலையில் ஒருவர் மாதம் ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை சம்பாதிக்கலாம். அனுபவம் பெற்றபிறகு, வருடத்திற்கு ரூ.4 லட்சம் முதல் 6 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
