UPDATED : செப் 05, 2011 12:00 AM
ADDED : செப் 05, 2011 10:13 AM
ஆசிரியராக இருந்து தனது சீரிய பணியின் மூலம் இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பெருமைக்குரிய இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியை நாம் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.
வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும் நாள் இன்னாள்.
இன்று பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கியும், மலர் கொடுத்தும் மாணவ, மாணவிகள் தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
மாலையில், சில பள்ளிகளில், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் பலரும், ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மாணவ, மாணவிகள் பலரும், தங்களது பழைய ஆசிரியர்களை நினைவு கூரும் நாளாகவும் இது அமையும்.
