UPDATED : செப் 15, 2011 12:00 AM
ADDED : செப் 15, 2011 10:39 AM
சி.ஏ., எனப்படும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் (Chartered Accountants) படிப்பில் தேர்ச்சி பெற்றால், ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. சி.ஏ., முடித்து விட்டு, தனியார் நிறுவனங்களில் ஆடிட்டர்களாக பணியில் சேர்ந்து பலர் நன்றாக சம்பாதிக்கின்றனர். இதனால், இந்த படிப்புக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்கு விபரங்கள், நிதி நடவடிக்கைகள், வரவுசெலவு ஆவணங்கள், ஆண்டு கணக்கறிக்கை தயாரிப்பு, வங்கி விபரங்கள், ஷேர் மார்கெட் நிர்வாகம் போன்ற விஷயங்களை திறமையுடன் நிர்வகிக்க வேண்டியது ஆடிட்டர்களின் பணியாகும்.
அனைத்து நிறுவனங்களின் கட்டாய தணிக்கை, வருமான வரி விபரங்கள், வங்கிக் கடன் நிர்வாகம் போன்ற விஷயங்களில் ஆடிட்டர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அரசு மற்றும் சமூகத்தின் கவனம் ஆடிட்டர்களின் மீது அதிகம் செல்கிறது.
சி.ஏ., முடித்தவர்கள் தனியாக கன்சல்டன்சி நிறுவனங்கள் மூலம், அக்கவுன்ட் நிர்வாகம், தகவல் நிர்வாகம் மற்றும் கன்ட்ரோல் சிஸ்டம், சர்வதேச நிதி தகவல் தொழில் நுட்பம், நிதி சார்ந்த சேவைத் துறை போன்ற விஷயங்களில் ஆலோசனைகள் வழங்கியும் அதிகம் சம்பாதிக்கின்றனர்.
நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வணிகவியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் சி.ஏ., படிப்பு படிப்பதற்கு தகுதியானவர்கள். இந்திய சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் கல்வி நிறுவனம் The Institute of Chartered Accountants of India (ICAI) இந்த துறையில் ஏராளமான மாணவர்களை ஈடுபடச் செய்வதற்கு பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறது.
