UPDATED : செப் 17, 2011 12:00 AM
ADDED : செப் 17, 2011 12:41 PM
இது குறித்து பள்ளி கல்வித் துறை செயலாளர் டி. சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில், நடுநிலைப் படிப்பை முடித்த மாணவ, மாணவிகளில் பலர் சூழ்நிலை காரணமாக உயர்நிலை, மேல்நிலை படிப்பை தொடர முடியாமல் உள்ளனர். இதுபோல் இடைநிற்றலை தடுக்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதன் விவரம், மாணவர்கள் இடைநிற்றலை முற்றிலும் களையும் விதமாக உயர்நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் எக்காரணம் கொண்டும் தங்கள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட ஊக்கமளிக்கும் வகையில் கல்வி ஊக்கத் தொகையாக 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,500ம், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2,000 வழங்கலாம்.
மேலும், இந்த ஊக்கத் தொகையினை சாதி, மத, இன வேறுபாடின்றியும் மற்றும் ஏற்கனவே கல்வி உதவித் தொகை பெறும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்கள் மற்றும் கற்பிப்புக் கட்டணத்தை மீளப் பெறும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் ஆகிய அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து வகை மாணவ, மாணவிகளுக்கும் வழங்கலாம்.
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த பரிந்துரையில் இந்த ஊக்கத் தொகையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அந்த முதலீட்டுத் தொகையினை பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளின்படி மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து செல்லும்போது அவர்களிடம் ஒப்படைக்கலாம்.
இவ்வாறு கருத்துருவில் கூறப்பட்டிருந்தது. அவரது கருத்துரு நன்கு பரிசீலிக்கப்பட்டு அரசு பின்வரும் ஆணையிடுகிறது.
அனைத்துத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகள் எக்காரணம் கொண்டும் தங்கள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட ஊக்கம் அளிக்கும் வகையில் சாதி, மத, இன வேறுபாடின்றி உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பில் பயிலும் அனைத்து வகை மாணவ, மாணவிகளுக்கும் தலா ரூ.1,500, மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் அனைத்து வகை மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.2,000 கல்வி ஊக்கத் தொகையாக மாநில அரசால் வழங்கப்படும்.
இத்தொகை மாணவ, மாணவிகளின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக வைப்பீடு செய்யப்பட்டு அவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும்பொழுது அத்தொகை அவர்களுக்கு வழங்கப்படும்.
10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பு சேரும்போது, 11-ம் வகுப்பு சேருகின்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம், 10-ம் வகுப்பு படித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அம்மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பில் படித்தபொழுது தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்பட்ட ரூ.1,500-க்கான பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும்.
அந்தத் தலைமை ஆசிரியர் 11-ம் வகுப்புக்கான தொகை மற்றும் 12-ம் வகுப்புக்கான தொகையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து, மாணவ, மாணவிகளிடம் 12-ம் வகுப்பு முடித்துச் செல்லும்போது, அப்பத்திரத்தினை அம்மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
10-ம் வகுப்பு முடித்து, 11-ம் வகுப்பில் சேராமல் தொழிற்பாடப்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும்பட்சத்தில் தாங்கள் அப்படிப்பில் சேர்ந்ததற்கான சான்று ஆவணங்களையும் மற்றும் சம்பந்தப்பட்ட அப்பயிற்சி நிறுவனங்களின் முதல்வரிடமிருந்து அம்மாணவ, மாணவிகள் அப்பயிற்சி நிலையங்கள் அல்லது கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதற்கான அத்தாட்சி சான்றுகளையும் பெற்று வந்து தாங்கள் 10-ம் வகுப்பு படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கொடுத்து தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் பத்திரத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் அடுத்த இரண்டு பருவ காலங்களுக்குள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். அதேபோன்று 11-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த இரண்டு பருவ காலங்களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு சேருகின்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம், 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு படித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அம்மாணவ, மாணவிகளுக்கான தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதிகள் நிதி நிறுவனத்தின் பத்திரத்தினை ஒப்படைக்க வேண்டும்.
அந்த தலைமையாசிரியர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கான தொகை மற்றும் 11-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 12-ம் வகுப்புக்கான தொகையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து, மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு முடித்து பள்ளியை விட்டு செல்லும்போது, அந்தப் பத்திரத்தினை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு இரண்டு பருவ காலங்களுக்குள் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11-ம் வகுப்பில் சேராமல் இடைநிறுத்தம் செய்யும் மாணவ, மாணவியர்களின் முதலீட்டுத் தொகை, அம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படாமல் மீளவும் அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ் 2011-2012-ம் ஆண்டில் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் செலவிற்காக ரூ.321 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.394.04 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 24 லட்சத்து 94 ஆயிரத்து 649 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். மேற்கண்டவாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
