UPDATED : செப் 20, 2011 12:00 AM
ADDED : செப் 20, 2011 11:07 AM
இன்ஜி., பட்டதாரிகூட எளிதில் பணியமர்த்தப்படுவதில்லை. கூடுதல் திறன்கள் கொண்டவர்கள் எளிதில் வேலைவாய்ப்பை தட்டிப்பறித்து விடுகின்றனர். மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ற இதர திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் மிக அவசியம். பட்டப்படிப்புடன், திறன் வளர்க்கும் பயிற்சிகள், துணைப்பாடத் திட்டங்களை படித்தல், குறுகியகால படிப்புகள் வேலைவாய்ப்பை எளிதாக்குகின்றன.
இச்சூழலில் மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டுக்கழகம் (National Skill Developement Corporation) பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தனியார்-பொது பங்களிப்பாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களே பல்வேறு பாடத்திட்டங்களை வழங்குகின்றன. அதற்கான நிதி உதவியை தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் பெற்றுக் கொள்கின்றன.
Talent Sprint, IL&FS, IIJT, Everonn, Globsyn போன்ற பயிற்சி நிறுவனங்கள் இதுபோன்ற ஏராளமான பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. மூன்று முதல் ஆறுமாத காலம் வரையிலான கூடுதல் திறன் பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான கட்டணமாக 6,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பயிற்சித்திட்டத்தையும், பயிற்சி நிறுவனங்களையும் பொறுத்து வசூலிக்கப்படுகிறது. சற்று நீண்டகால கோர்ஸ்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நிறுவனங்களே தொழிற்சாலைகளுக்கு தேவையானவற்றை உணர்ந்து, அதை மாணவர்களுக்கு பயிற்சிப் பாடத்திட்டமாக வடிவமைக்கின்றன. சில பயிற்சி மையங்கள், தொழில்நிறுவனங்களால் நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யும் அளவுக்கு அவைகளுடன் இணைந்து செயல்படுகின்றன. பட்டப்படிப்பின் போது, குறிப்பிட்ட துறையில் பெறும் கூடுதல் திறன் மாணவர்களுக்கு வேலைகிடைப்பதை சுலபமாக்குகின்றன.
முழுநேர மற்றும் பகுதி நேர படிப்புகள் இவ்வகையில் வழங்கப்படுகின்றன. தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரையும்; வாரத்துக்கு ஐந்து நாட்கள் வரையும் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. முழுநேர பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் வசதிக்காக பயிற்சி நேரம் காலை மற்றும் மாலை வேளைகளில் நடக்கிறது. பொறியியல் மாணவர்களுக்கு என்றில்லை, தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்துதல் நோக்கம் என்பதால், எட்டாம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற மாதிரியான கோர்ஸ்கள் உள்ளன என்கிறார் Globsyn குழுமத்தின் முதன்மைச் செயல் அலுவலர் தாஸ்குப்தா.
இத்திட்டத்தின் நோக்கமே, வேலையில்லா பட்டதாரிகளை, தகவல் தொழில்நுட்பம், வங்கி, நிதிச்சேவைகள், காப்பீடு, ஐ.டி., சார்ந்த சேவைகள் போன்ற துறைகளுக்கு தயார்படுத்துவதாகும். தனியார் பயிற்சி நிறுவனங்களும் இத்துறையில் ஏராளமாக முதலீடு செய்து வருகின்றன. இத்துறையில் அரசும், தனியார் அமைப்புகளும் கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்க ஒன்று.
