UPDATED : நவ 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சமீபகாலமாக இந்தியாவின் ஐ.ஐ.டி.,க்கள் வாயிலாக மருத்துவப் படிப்புகள் நடத்தப்படப்போகின்றன என்ற பரவலான பேச்சு நிலவிவந்தது. ஆனால் இதனை கடுமையாக மறுத்துள்ள ஐ.ஐ.டி., ஆசிரியர் குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் அமைப்பும், இது சாத்தியமில்லாத, விருப்பத்திற்கு ஒப்பாத
மற்றும் அபாயகரமான சிந்தனை என்று எச்சரித்துள்ளது.
ஐ.ஐ.டி.,க்களில் ஏற்கனவே பயோடெக்னாலஜி படிப்புகள் உள்ளன என்றும் இக்கல்வி நிறுவனம் வாயிலாக மருத்துவப் படிப்புகளை நடத்துவது விரும்பத் தக்கதல்ல என்று டில்லி ஐ.ஐ.டி.,யின் டீன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறையில் 11வது ஐந்தாண்டுத்திட்டத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிவியலறிஞர் யஷ்பால் தலைமையில் ஐ.ஐ.டி., வாயிலான மருத்துவப்படிப்புக்கான ஆராய்ச்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் பரவிவந்தன. இதனைத்தொடர்ந்து ஐ.ஐ.டி.,யின் ஆசிரியர் குழு பலவகையில் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ஐ.ஐ.டி.க்களுக்கு பல்கலைக்கழகம் போன்ற முகத்தைக் கொண்டுவரும் முயற்சிகளை விட்டுவிட்டு உள்கட்டமைப்பு, தரமான மாணவர் சேர்க்கையில் கவனம் செலுத்துதல், இன்ஜினியரிங் கல்வியில் உலகத்தரம் வாய்ந்த கல்வியைத் தருதல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் இயக்குனர் கூறியுள்ளார். மாணவர்-ஆசிரியர் விகிதம் தொடர்ந்து குறைந்துவருவதாகவும் இதனால் இவர்களுக்கிடையே உள்ள தொடர்பு விகிதமும் குறைந்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.ஐ.டி.,க்களின் பணியை வேறு துறைகளில் விரிவுபடுத்துவதைவிட, தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிக்கு ஏற்ற உள்ளார்ந்த பணிவிரிவுபடுத்துதலே சிறந்தது என்று ஐ.ஐ.டி., கோரக்பூரின் முன்னாள் மாணவர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் நல்ல திட்டமிடலுடன் கூடிய துறை விரிவுபடுத்தும் பணிகள் நல்லதுதான் என்று இவர் கூறுகிறார்.
ஐ.ஐ.டி., நிறுவனத்திற்கு தனித்துவமும், நல்ல பிராண்ட் இமேஜும் உள்ளதால், இதுமாதிரியான முயற்சிகள் இவற்றுக்கு எதிராக மாறிவிடும் அபாயம் உள்ளதாக டில்லியைச் சார்ந்த முன்னாள் ஐ.ஐ.டி., மாணவர் கூறுகிறார். மாறாக, அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி.,யைப் போல் ஐ.ஐ.டி.,க்களை உலகத்தரம் வாய்ந்த தனிப்பெரும் கல்வி நிறுவனங்களாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என்றும் இவர் கூறியுள்ளார்.
மருத்துவக்கல்வி போன்ற பிற விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன், தற்போது நலிந்த நிலையில் இயங்கும் ஐ.ஐ.டி.,க்களின் சோதனைக் கூடங்களை முன்னேற்றுவதைப்பற்றி முதலில் சிந்திக்கவேண்டும் என்று கல்வியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துவருகிறார்கள்.
ஐ.ஐ.டி.,க்களும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையேயான உறவைப்பலப்படுத்துவதே மருத்துவக் கல்வி முறையை அறிமுகப்படுத்துவதைவிட சிறந்த முயற்சியாக இருக்கும் என்றும் சில முன்னாள் மாணவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மத்திய அரசு 6 புதிய ஐ.ஐ.டி.,க்களைத் துவங்கியது. இதற்கு முன் 7 ஐ.ஐ.டி.,க்களே இயங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
