தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் டி.ஆர்.பி., விண்ணப்பத்துக்குதட்டுப்பாடு!

தமிழகத்தில் டி.ஆர்.பி., விண்ணப்பத்துக்குதட்டுப்பாடு!

தமிழகத்தில் டி.ஆர்.பி., விண்ணப்பத்துக்குதட்டுப்பாடு!


UPDATED : டிச 05, 2009 12:00 AM

ADDED : டிச 05, 2009 05:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2009 12:00 AM ADDED : டிச 05, 2009 05:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியப்போக்கினால், ஏராளமான ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நேரடி தேர்வு மூலம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விளம்பரம் கடந்த நவம்பர் 13ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ்- 18, ஆங்கிலம்- 18, கணிதம்- 283, இயற்பியல்- 29, வேதியியல்- 30, தாவரவியல்- 27, விலங்கியல்- 27, வரலாறு- 90, புவியியல்- 24 என 564 பணியிடங்கள் நிரப்புவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விண்ணப்பம் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 30ம் தேதி இந்த விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.
 
அனைத்து மாவட்டங்களுக்கும் 2,000 முதல் 2,500 வரை மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்பியிருந்ததால், பெரும்பாலான மாவட்டங்களில் முதல்நாளே விண்ணப்பங்கள் தீர்ந்து விட்டன. இரண்டு நாட்கள் கழித்து சில நூறு விண்ணப்பங்கள் மட்டும் தேர்வு வாரியம் அனுப்பி வைத்தது. அதுவும் ஒரே நாளில் தீர்ந்து, மீண்டும் தட்டுப்பாடு நிலவியது. விண்ணப்பங்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு இருந்து கொண்டே வருவது தெரிந்து, விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.
 
விண்ணப்பிக்க கடைசி நாள் வரை இதே நிலை நீடித்தால், விண்ணப்பம் பெற முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில், பலரும் விண்ணப்பங்களை பெற மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தவம் இருக்கின்றனர். ஒரு விண்ணப்பத்துக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதால், இது தேர்வு வாரியத்துக்கு ஒரு வருவாயாகவே உள்ளது. ஆனால், போதிய அளவு விண்ணப்பங்கள் அனுப்பாமல் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குவது எதற்காக என புரியாமல் ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
 
இது குறித்து ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நியமிக்கப்படுவதால், சமீபத்தில் பி.எட்., படித்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மிகக்குறைந்த பணியிடங்களுக்கு மட்டும் எப்போதாவது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது.
 
பி.எட்., படித்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் இதில் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்பங்கள் மாவட்டத்தில் ஒரே இடத்தில் மட்டுமே வழங்குகின்றனர். விண்ணப்பம் பெற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலுவலகத்துக்கு வந்தால், விண்ணப்பம் தீர்ந்துவிட்டது; நாளை வாருங்கள் என பதில் அளிக்கின்றனர். பலரும் நான்கைந்து நாட்களாக தொடர்ந்து வந்து கொண்டுள்ளோம். தேவையான அளவுக்கு விண்ணப்பங்கள் வழங்கால் ஆசிரியர் தேர்வு வாரியம் இழுத்தடிப்பதன் காரணம் புரியவில்லை. விளம்பரம் வெளிவந்தது முதல் வினியோகத்துக்கு வரும் நாள் வரை 20 நாள் கால அவகாசம் இருந்தது.
 
ஆசிரியர் தேர்வு வாரியம் போதுமான அளவு விண்ணப்பங்களை தயார் செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தற்போது தினம் 100 விண்ணப்பங்கள் வழங்குவதும், பின் தீர்ந்துவிட்டதாக கூறுவதும் பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. தற்போது அனைத்து விண்ணப்பங்களும் ஆன்-லைன் மூலம் டவுன்லோடு செய்யும் வசதியும் வந்துவிட்டது. இந்த விண்ணப்பத்துக்கு அந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியப்போக்கால் ஏராளமான ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us