தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியிலும் பகுத்தறிவு அரசியல்

பள்ளியிலும் பகுத்தறிவு அரசியல்

பள்ளியிலும் பகுத்தறிவு அரசியல்


UPDATED : ஆக 30, 2023 12:00 AM

ADDED : ஆக 30, 2023 08:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2023 12:00 AM ADDED : ஆக 30, 2023 08:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கல்லுாரியில் மாணவர் மன்றங்களை உருவாக்கி, அரசியலைப் புகுத்த நினைக்கும் தமிழக அரசு, பள்ளி மாணவர்களிடமும் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பும் வகையில், கருணாநிதி திட்டங்களைப் பற்றி போட்டிகள் நடத்தி, பரிசுகள் கொடுப்பதாக அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள 100 அரசு கலை, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் தமிழ் மன்றங்களைத் துவக்க, 5 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கல்லுாரிகளில் ஏற்கனவே பல மன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த தமிழ் மன்றங்கள் மூலமாக போட்டிகளை நடத்தி, ரொக்கப்பரிசுகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்லுாரி மாணவர்களிடம் திராவிட அரசியலைப் புகுத்தும் முயற்சி இது என்று பல தரப்பிலும், கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களிடமும் பகுத்தறிவு அரசியலைப் பரப்பும், புதிய முயற்சியை தமிழக அரசு துவக்கியுள்ளது. கருணாநிதியின் திட்டங்களைப் பற்றி போட்டி நடத்துவதாகக் கூறி, பரிசுகளையும் அறிவித்துள்ளது.முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா ஒட்டி, பள்ளிக்கல்வித்துறை சார்பில், மன்ற செயல்பாடுகளுக்கான தனித்திறன் போட்டிகள் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளுக்கு, தலைப்புகள் கொடுத்து, இம்மாத இறுதிக்குள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால் இதற்காகத் தரப்பட்டுள்ள தலைப்புகள் அனைத்தும், கருணாநிதியின் பகுத்தறிவுக் கொள்கையை பள்ளி மாணவர்கள் படித்து, அதிலிருந்து தனித்திறன் போட்டிகளில் பங்கேற்கும் வகையிலேயே தரப்பட்டுள்ளன. அறநிலையத்துறையை அரசு நடத்துவதே தவறு என்ற வாதம் வலுத்து வரும் நிலையில், அறநிலைய அமைச்சகம் அமைத்த பகுத்தறிவுவாதி கருணாநிதி என்று ஒரு தலைப்பு உள்ளது.இதேபோன்று, கட்டுரைப்போட்டிக்கு, நிர்வாக சீர்த்திருத்தத்தில் கருணாநிதி உருவாக்கிய புதிய சட்டங்கள், மகளிருக்கான சொத்துரிமை, உள் ஒதுக்கீடு- சமூக நீதியின் புதிய பரிமாணம், நில சீர்த்திருத்தத்தில் கருணாநிதியின் நில உச்சவரம்பு சட்டம் போன்ற தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. பேச்சுப்போட்டிக்கு, சமத்துவபுரம் எனும் சமூக புரட்சி, கருணாநிதி ஆட்சியில் பெண்ணுக்கு நீதி, 69 சதவீத இட ஒதுக்கீடுகள் வளர்ந்த வரலாறு என 10 தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.கருணாநிதி ஆட்சிக்கால சீர்திருத்தங்கள், திட்டங்களை மட்டும் மாணவர்கள் மத்தியில் பரப்பும் நோக்கில் தலைப்புகள் அமைந்துள்ளன. பள்ளி மாணவர்களை மூளைச்சலவை செய்யும் விதமாக இந்தப் போட்டிகள் திட்டமிட்டு நடப்பதாக, இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு, இந்தத் தலைப்பிலான போட்டிகள் தேவையில்லை என்று கல்வியாளர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.அரசியல், சமூகம், சட்டங்கள் குறித்து, மேலோட்டமான கருத்துகளே பள்ளிப்பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. பள்ளிக்கல்வி முடித்து, உயர்கல்விக்கு செல்லும் போது தான், அரசியல், கட்சிகளின் சித்தாந்தங்கள், சமூக மாற்றத்திற்கான திட்டங்கள் குறித்த தெளிவான பார்வை அவர்களுக்கு ஏற்படும். ஆனால் கருணாநிதியின் புகழைப் பரப்பும் விதமாக இந்த முயற்சி நடப்பது தெளிவாகத் தெரிகிறது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ஆளும்கட்சியின் கொள்கைகளை பள்ளி மாணவர்களிடம் திணிக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், போட்டிகளுக்கு தலைப்புகள் உருவாக்கி அனுப்பியுள்ளனர். இவர்கள் அரசாங்க பணியாளர்களா அல்லது ஆளும்கட்சி ஆதரவாளர்களா என்றே தெரியவில்லை. கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறை, கழிப்பிடம், குடிநீர் வசதி போன்ற கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரலாம்.இப்படி போட்டிகள் நடத்தி பரிசு கொடுப்பது, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்க வழிவகுக்கும். இந்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித்துறை திரும்ப பெற வேண்டும், என்றனர். பிஞ்சுகளின் நெஞ்சில் அரசியல் நஞ்சைக் கலக்கும் இந்த முயற்சி, ஆரம்பத்திலேயே தடுக்கப்படுவது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us