UPDATED : ஜன 04, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 05:37 PM
திருப்பூர்:
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், பள்ளி கல்வித்துறை சார்பில், தாவரவியல் துறை சார்பில், மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட துவக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான ஐந்து நாள் பணியிடை பயிற்சிமுகாம் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நேற்று துவங்கியது.இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பேசியதாவது:
அறிவியல் பாடம் குறித்து கூடுதல் தகவல்களை அறிய, ஆசிரியர்கள் மேலும் மேலும் மேம்பட்டவர்களாக மாற பயிற்சி வழங்கப்படுகிறது. கல்வி கற்பதற்கும், புதியவற்றை தெரிந்து கொள்வதற்கும், படிப்பை தொடர்வதற்கும் எல்லையே இல்லை. சாகும் வரை படித்துக் கொண்டே இருக்கலாம்.ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் அறிவியலில் அற்புதங்கள் முழுமையாக சென்று சேர வேண்டும் என்பதற்காக, அறிவியல் பார்வையில் அவர்கள் உலகத்தை காண தேவையானவற்றை முழுமையாக எடுத்துரைக்க வேண்டும். அதற்காகவே, ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, கல்லுாரி முதல்வர் எழிலி தலைமை வகித்தார். அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர் பாலசரவணன் வரவேற்றார்.கூட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், தொடக்கல்வி அலுவலர் தேவராஜன், கல்லுாரி துறை தலைவர்கள் நளினி (வேதியியல்), ஜெயசித்ரா (இயற்பியல்), குருசாமி (தாவரவியல்), லித்தி (விலங்கியல்) உட்பட பலர் பங்கேற்றனர். வரும், 6ம் தேதி துவக்க, நடுநிலைப்பள்ளியில் இருந்து பங்கேற்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பேராசிரியர்கள், இணை பேராசிரியர் குழுவினர் பயிற்சி வழங்குகின்றனர்.