UPDATED : ஜன 13, 2024 12:00 AM
ADDED : ஜன 13, 2024 10:58 AM
கடலுக்கடியில் பல நகரங்களும், கப்பல்களும் மூழ்கிக்கிடக்கும் நிலையில் ரகசியங்களையும், ஆச்சரியங்களையும் உலகிற்கு எடுத்துரைக்க ஆழ்கடல் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.விந்தையான ஆழ்கடல்
ஆழ்கடல் பகுதி சூரிய ஒளி ஊடுருவாத இருட்டான பகுதியாக இருக்கும். பெரும்பாலான அறிய வகை உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. ஆழ்கடல் ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வு பணியில், பல்வேறு பிரத்யேக உபகரணங்களும், தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆழ்கடல் மைனிங், நீருக்கடியில் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, கடல் காலநிலை மாற்றம், ஆழ்கடலில் பல்லுயிர் பெருக்கத்தின் ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப பயன்பாடு போன்ற சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடல் நீரின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், கடல்வாழ் உயிரினங்களின் அனைத்து வகையான வாழ்க்கை முறைகள் மற்றும் பூமியின் மேற்பரப்பிலுள்ள புவியியல் மற்றும் புவி இயற்பியல் அம்சங்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்படுகின்றன. கடல் ஆய்விற்காக, இந்திய அரசின் சார்பில் ’டீப் ஓசன் மிஷன்’ எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.ஆழ்கடல் பயிற்சிகள்
ஆழ்கடலில் ஆய்வு செய்ய ஸ்கூபா டைவிங், ஆழ்கடல் நீச்சல் உள்ளிட்ட பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சிகளின் வாயிலாக, ஆழ்கடலின் தன்மை, கடல்வாழ் உயிர்களின் வாழ்வியல் மற்றும் சுற்றுசூழல் மாசுபாடு, பவளப்பாறைகள் மற்றும் அவற்றை சார்ந்த கடல்வாழ் உயிரினங்களின் பாதிப்பு உள்ளிட்டவை குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், அறிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்ளவும், தொல்லியல் துறை சார்ந்த கடல்சார் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கும் ஆழ்கடல் பயிற்சி பயனுள்ளதாக அமைகிறது. கடல் சார்ந்த படிப்புகள்
கடல் சார்ந்து படிக்க ஆர்வமுள்ளவர்கள், மேல்நிலை வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்வு செய்து படிப்பதோடு, இளநிலை பட்டப்படிப்பில் அறிவியல் சார்ந்த துறையை தேர்வுசெய்ய வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் ஓஷனோகிராபி, மரைன் அறிவியல், மரைன் பயாலஜி, மரைன் ஜியாலஜி, அக்வாட்டிக் பயாலஜி மற்றும் பிஷரீஸ், எம்.டெக்.,- கடல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை, கடல் பொறியியல் போன்ற பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. &'ஸ்கூபா டைவிங்’ குறுகிய கால பிரத்யேக பயிற்சியாகவும் வழங்கப்படுகிறது.வேலைவாய்ப்புகள்
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கடல் ஆராய்ச்சி சார்ந்த பணிவாய்ப்புகள் உள்ளன. மேலும், கடல்சார் ஆய்வாளர், கடல் தொல்பொருள் ஆய்வாளர், ஆழ்கடல் புகைப்படம் எடுப்பவர், கமர்ஷியல் டைவிங், கோல்ப் பால் டைவர், பப்ளிக் சேப்டி டைவர், கோரல் நர்சரி டெக்னிசியன், வாட்டர் சயின்ஸ் டைவ் மாஸ்டர் போன்ற சில கடல் சார்ந்த பணி வாய்ப்புகளும் உள்ளன.