UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 09:55 AM
உடுமலை:
மலைவேம்பு மரம் வளர்க்க விரும்புவோர், மேட்டுப்பாளையம் வனவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம்.
மலைவேம்பானது, இந்தியாவை தாயகமாக கொண்டு வேகமாக வளரக்கூடிய இலையுதிர் மரமாகும். அனைத்து மண் வகைகளிலும் வளரும் தன்மையை பெற்றுள்ளது. இருப்பினும் வளமான மண் மற்றும் நீர் வசதி கொண்ட இடங்களில், நன்கு வளரும்.
கடல் மட்டத்திலிருந்து, 1,800 மீ., வரை வளரக்கூடியது. பருவமழை காலத்தில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு செடிக்கும், போதுமான இடைவெளி விட்டு, ஏக்கருக்கு, 444 கன்றுகள் வரை நடவு செய்யலாம்.
களைகள் அதிகமாக இருக்கும் பொழுது, நன்றாக உழுது விட வேண்டும். செடியை சுற்றி நன்றாக கொத்தி, அதே மண்ணைக்கொண்டு வட்டப்பாத்தி அமைத்தால், மழை நீரை சேமிக்கலாம்.
இந்த வட்டப்பாத்தி, மூடு பள்ளத்திற்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். முதல் ஆண்டிலேயே பழுதான நாற்றுக்களை நீக்கிவிட்டு, புதிய கன்றுகளை நடவேண்டும். மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாப்பதற்கும், களை வளர்ச்சியை கட்டுப்படுத்த, தோட்டத்தில் கிடைக்கும் தழை இலைகளை வைத்து போர்வை இடலாம்.
மாற்று மரக்கூழ் மற்றும் தீக்குச்சி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இம்மரம் பிளைவுட், எரிபொருள், கரித்துண்டுகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு, மேட்டுப்பாளையம் வனவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம் என, கோவை வேளாண் பல்கலை., சார்பில் அறிவுறுத்தியுள்ளனர்.