UPDATED : ஜன 04, 2011 12:00 AM
ADDED : ஜன 04, 2011 11:57 AM
அறிவியல் துறையில் உலகை இந்தியா வழிநடத்த வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் நடந்துவரும் 98 வது இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், "1000 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவியல் துறையில் இந்த உலகை இந்தியாதான் வழிநடத்தியது. தற்போது அந்த வாய்ப்பு மீண்டும் வந்துள்ளது" என்றார்.
மேலும் அவர், "500 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையங்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கணிதம் மற்றும் அறிவியல் துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், அப்பாடங்களை படிக்க மாணவர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளதானது வருத்தத்திற்குரியது. நாம் நமது உயர்கல்வியின் மதிப்பையும், தரத்தையும் அதிகரிக்க வேண்டும். ஆராய்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன.
ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடும் தனியார்துறை நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். மேலும், சமூகம் - ஆராய்ச்சி நிறுவனங்கள் - கல்லூரிகள் - பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கிடையே நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்" என்று பேசினார்.
