UPDATED : அக் 30, 2025 07:27 AM
ADDED : அக் 30, 2025 07:28 AM
சென்னை:
'மனிதநேயம்' பயிற்சி மையத்தில் படிக்கும் 525க்கும் மேற்பட்ட, குரூப் - 1 தேர்வர்களுக்கு, தலா 10,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின், மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லாத கல்வியகம் சார்பில், சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், நடப்பாண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள், கடந்த செப்., 15ம் தேதி முதல் நேரிலும், ஆன்லைன் வாயிலாகவும் நடத்தப்படுகிறது. தேர்வர்கள் பயன்பெறும் வகையில், முதன்மை தேர்வுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் காணொளிகள் www.mntfreeias.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனிதநேய ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லாத பயிற்சி மையத்தின் சார்பில், சென்னை சி.ஐ.டி., நகரில் உள்ள அலுவலகத்தில், கடந்த 26ம் தேதி முதல் நேற்று வரை நடந்த நிகழ்ச்சியில், 525க்கும் அதிகமான குரூப் - 1 முதன்மை தேர்வர்களுக்கு, தலா 10,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பயிற்சி மையத்தின் நிறுவனர் சைதை துரைசாமி, முன்னாள் டி.ஜி.பி., அலெக்சாண்டர் ஆகியோர், தேர்வர்களுக்கு உதவித்தொகை வழங்கி வாழ்த்தினர்.

