நாடு முழுவதும் 100 கல்வி நிறுவனங்களில் 5ஜி ஆய்வகங்கள்
நாடு முழுவதும் 100 கல்வி நிறுவனங்களில் 5ஜி ஆய்வகங்கள்
UPDATED : டிச 04, 2025 07:49 AM
ADDED : டிச 04, 2025 07:50 AM

சென்னை:
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 5ஜி நெட்வொர்க் சேவைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 99.9 சதவீத மாவட்டங்கள் 5ஜி இணைப்பை பெற்றுள்ளன. அக்டோபர் 31, 2025 நிலவரப்படி நாடு முழுவதும் 5.08 லட்சம் 5ஜி கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
வேகமான இணையத்துடன் துல்லியமான விவசாயம், தொலைக்கல்வி, தொலை மருத்துவம் போன்ற துறைகள் பலனடைந்து வருகின்றன. 5ஜி சேவைகளை விரிவுபடுத்த மத்திய அரசு அலைக்கற்றை ஏலம், வங்கி உத்தரவாத சலுகைகள், வட்டி விகித மாற்றங்கள் உள்ளிட்ட பல நிதி சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு அமைப்பை எளிதாக்க 'விரைவு சக்தி சஞ்சார் போர்ட்டல்' மற்றும் புதிய வழித்தட அனுமதி விதிகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 6ஜி தயாரான கல்வி மற்றும் ஸ்டார்ட்-அப் சூழல் உருவாக்க நாடு முழுவதும் 100 கல்வி நிறுவனங்களில் 5ஜி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த தகவலை மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளார்.

