UPDATED : நவ 05, 2023 12:00 AM
ADDED : நவ 05, 2023 10:09 AM
ஐ.சி.ஏ.ஐ.,ன் தென் மண்டல அலுவலகம் சார்பில், சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த பட்டமளிப்பு விழாவில், மத்திய கவுன்சில் உறுப்பினர்கள் ராஜேந்திர குமார், ஸ்ரீபிரியா ஆகியோர், பட்டங்களை வழங்கினர். சென்னையில் மட்டும், 1,000 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.குஜராத், ஆமதாபாத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அனிகேட் சுனில் டாலாடி பேசியதாவது:
இன்று பட்டம் பெற்ற அனைவரும், என்றைக்கும் பெற்றோரை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் தியாகத்தினால், சி.ஏ., படிப்பை முடித்துள்ளீர்கள். இந்தியாவில், பல கோடி பேர் வரி செலுத்துகின்றனர். ஆனால், நான்கு லட்சம் பட்டய கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் நிறைய பேர், சி.ஏ., படிப்பில் சேர்ந்து, பட்டய கணக்காளர்களாக வர வேண்டும்.பட்டய கணக்காளர்கள், நிதி நிர்வாகத்தை கையாளுகின்றனர். உண்மையாகவும், நேர்மையுடனும் பணிபுரிய வேண்டும். ஒவ்வொரு பட்டய கணக்காளரும், அதிக பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில், ஒரு பக்கத்தில் பட்டய கணக்காளரும், அடுத்த பக்கத்தில் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் கையெழுத்திடுவர். எந்த பக்கத்தில் கையெழுத்திடுவதாக இருந்தாலும், அதற்கு ஏற்ப பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சென்னை விழாவில் தென் மண்டல தலைவர் பன்னா ராஜ் பேசும்போது, தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதற்கு ஏற்ப பாட திட்டங்களும் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. சி.ஏ., பட்டம் பெற்றவர்கள் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களை புதுப்பித்து கொண்டு வர வேண்டும் என்றார்.மத்திய கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் பேசியதாவது:
சி.ஏ., மிகப்பெரிய படிப்பு. இந்த தேர்வு தான் எந்த வித முறைகேடும் இன்றி, நேர்மையாக நடக்கிறது. சி.ஏ., தேர்வு தான் கஷ்டம் என்று சொல்வர். கடினமாக உழைத்தால் தேர்வில் வெற்றி பெறலாம்.எனவே, சி.ஏ., பட்டம் பெற்றவர்கள், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும். ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டால் எந்த சாதனைகளையும் செய்ய முடியும். இந்திய பட்டய கணக்காளர்கள் உலகளவில் சிறப்பான இடத்தை பிடித்து வருகின்றனர்.மத்திய கவுன்சில் உறுப்பினர் ஸ்ரீபிரியா பேசியதாவது:
சென்னையில் இன்று சி.ஏ., பட்டம் பெற்றவர்களில், 50 சதவீதம் பேர் பெண்கள். தற்போது, பட்டய கணக்காளர்களில், 29 சதவீதம் பெண்கள் உள்ளனர். சி.ஏ., படிக்கும் மொத்த மாணவர்களில், 40 சதவீதம் மேல் பெண்கள் உள்ளனர். பெண்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் பாடமாக சி.ஏ., அமைந்துள்ளது. ஆடிட்டர் பணி, நாட்டிற்கு மிக முக்கியமானது. அதிகம் பேர் சி.ஏ., படிப்பில் சேர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
