UPDATED : ஜன 06, 2025 12:00 AM
ADDED : ஜன 06, 2025 06:08 PM

புதுடில்லி:
இந்திய கல்வி நிறுவனங்களில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு, இரண்டு சிறப்பு வகை விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பலர் படிக்க வருகின்றனர். அவ்வாறு படிக்க வரும் மாணவர்களுக்கு, உள்துறை அமைச்சகம் , இ-ஸ்டூடன்ட் விசா மற்றும் இ-ஸ்டூடன்ட்-எக்ஸ் ஆகிய விசாக்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கல்வி பயில வரும் சர்வதேச மாணவர்களின் வசதிக்காக, இ-ஸ்டூடன்ட் விசா மற்றும் இ-ஸ்டூடன்ட்-எக்ஸ் ஆகிய விசாக்கள் அறிமுகம் செய்துள்ளோம். விண்ணப்பதாரர்கள் அனைவரும் அரசால் தொடங்கப்பட்டுள்ள 'ஸ்டடி இன் இந்தியா'(எஸ்.ஐ.ஐ.,) போர்ட்டலை பயன்படுத்த வேண்டும்.
எஸ்.ஐ.ஐ., போர்ட்டல் இந்தியாவில் நீண்ட கால அல்லது குறுகிய கால படிப்புகளை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களின் சேர்க்கை செயல்முறையை எளிதாக்குகிறது.
மாணவர்கள் //indianvisaonline.gov.in/ என்ற போர்ட்டலில் தனித்தனியாக விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். படிப்பின் காலத்தைப் பொறுத்து ஐந்து ஆண்டுகள் வரை மாணவர் விசாக்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் பெயர், நாடு, பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற எளிய விவரங்களை நிரப்ப வேண்டும்.
இந்தியாவில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களின் தனிப்பட்ட மாணவர் எஸ்.ஐ.ஐ., ஐ.டி., இருக்க வேண்டும், ஏனெனில் இந்த ஐ.டி., அவர்களின் டாஷ்போர்டை அணுகவும், கல்லூரி மற்றும் படிப்பு விண்ணப்பங்கள், விசா/இ-விசாவின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் உதவும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.