தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 2026: மாணவியர் மீண்டும் சாதனை!

தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 2026: மாணவியர் மீண்டும் சாதனை!

தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 2026: மாணவியர் மீண்டும் சாதனை!


UPDATED : மே 08, 2026 04:06 AM

ADDED : மே 08, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 04:06 AM ADDED : மே 08, 2026 04:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககம், மார்ச் 2026ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெற்றன. தற்போது இத்தேர்வுகளின் முடிவு வெளியாகி உள்ளது. தற்போதைய தேர்வு முடிவுகளின்படி, தமிழகத்தின் கல்வி வளர்ச்சி கடந்த ஆண்டை விட முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவியர்களே அதிக தேர்ச்சி

இந்த ஆண்டு பொதுத்தேர்வினை மொத்தம் 7,91,654 மாணாக்கர்கள் எழுதினர். இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,18,724 ஆகவும், மாணவர்களின் எண்ணிக்கை 3,72,930 ஆகவும் இருந்தது. ஒட்டுமொத்தமாக 7,53,694 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், இது 95.20 சதவீதமாகும். வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர்களே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், மாணவியர் 97 சதவீதமும் (4,06,167 பேர்), மாணவர்கள் 93.19 சதவீதமும் (3,47,527 பேர்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவியர் 3.81 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இத்தேர்விற்கு 7,874 பேர் வருகை புரியவில்லை. கடந்த 2025ம் ஆண்டு தேர்ச்சி சதவீதம் 95.03 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 0.17 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியான தேர்ச்சி

மேலும், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில் ஈரோடு மாவட்டம் 98.87 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை (98.05%), கன்னியாகுமரி (97.63%), திருநெல்வேலி (97.54%) மற்றும் திருச்சி (97.50%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்திலும் ஈரோடு மாவட்டமே 98.24 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை, திருச்சி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அரசுப் பள்ளித் தேர்ச்சியில் சிறப்பிடம் பெற்றுள்ளன.

பள்ளி வாரியான தேர்ச்சி

தமிழகத்தில் மொத்தம் 7,536 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 2,639 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. மேலும், 5,170 பள்ளிகள் 95 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, 489 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியையும், 1,572 பள்ளிகள் 95 சதவீதத்திற்கு மேலான தேர்ச்சியையும் பெற்றுள்ளன.

பள்ளிகளின் வகைப்பாட்டின்படி பார்க்கும் போது, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.72 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.14 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 92.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. இருபாலர் பள்ளிகள் 95.30 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 97.08 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 90.49 சதவீதமும் தேர்ச்சி கண்டுள்ளன. பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.59 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளன.

பாட வாரியான தேர்ச்சி

இதனைத் தொடர்ந்து, முக்கியப் பாடங்களில் உயிரியல் பாடம் 99.49 சதவீத தேர்ச்சியுடன் முன்னிலையில் உள்ளது. கணினி அறிவியல் 99.84 சதவீதமும், கணிதம் 99.12 சதவீதமும், இயற்பியல் 98.87 சதவீதமும், வேதியியல் 98.82 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. பிற பாடங்களான தாவரவியல் 98.62 சதவீதம், விலங்கியல் 98.69 சதவீதம், வணிகவியல் 97.55 சதவீதம், கணக்குப் பதிவியல் 98.04 சதவீதம் மற்றும் வரலாறு 97.90 சதவீதம் எனத் தேர்ச்சி பெற்றுள்ளன.

மேலும், பாடப் பிரிவுகளின் அடிப்படையில் அறிவியல் பிரிவு 96.90 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்திலும், வணிகவியல் பிரிவு 92.67 சதவீதத்துடனும் உள்ளன. தொழிற்பாடப் பிரிவு 85.97 சதவீதமும், கலைப் பிரிவு 85.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்

இந்த ஆண்டு ஏதேனும் ஒரு பாடத்தில் முழுமையாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 16,024 ஆகும். இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 1,695 பேர் அடங்குவர். பாடவாரியாகப் பார்க்கும் போது, கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 6,945 பேர் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும், கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 2,099 பேரும், கணக்குப் பதிவியலில் 1,946 பேரும், உயிரியலில் 784 பேரும், கணிதத்தில் 732 பேரும், வேதியியலில் 632 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொழிப் பாடங்களில் தமிழில் 83 பேரும், ஆங்கிலத்தில் 21 பேரும் நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

இதர தேர்ச்சியாளர்கள்

இந்தத் தேர்வில் 8,855 மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் பங்கேற்றதில் 6,811 பேர் (76.92%) தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகளில் 250 பேர் தேர்வெழுதி 238 பேர் (95.20%) தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், 25,521 இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களில் 6,171 பேர் (24.18%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதே போல், மார்ச் 2026ல் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் 20,444 தனித்தேர்வர்கள் கலந்து கொண்டனர், அவர்களில் 8,491 பேர் (41.53%) தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us