UPDATED : அக் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மலை கிராமங்கள் மிகுந்த நீலகிரி மாவட்டத்தில் பணியாற்ற ஆசிரியர்கள் மறுப்பதால், 300க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு பள்ளிக் கல்வித்துறை உறுதியான நடவடிக்கை எடுக்காததால், இம்மாவட்ட மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் நிறைந்த நீலகிரி மாவட்டத்தை சுற்றிப்பார்க்க ஆசைப்படாதவர்கள் இருக்க மாட்டார் கள். ஆனால், அங்கேயே பணிபுரிய வேண்டும் என்றால் ‘எஸ்கேப்’ ஆகிவிடுகின்றனர்.
இதற்கு அங்கு நிலவும் சீதோஷ்ணம் மற்றும் முழுமையான அளவில் போக்குவரத்து வசதியின்மையும் தான் முக்கியக் காரணம். அரசு பணிகளில், குறிப்பாக ஆசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை, இம்மாவட்டத்தில் எப்போதும் காலி பணியிடங்கள் கணிசமாக இருக்கின்றன.
ஆசிரியர் பணியில் புதிதாக சேரும்போது வேலை கிடைத்தால் போதும் என்று மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள், ஓர் ஆண்டுக்குள் முக்கிய நகரப் பகுதிகளுக்கோ அல்லது தங்களது சொந்த ஊர் பக்கமோ மாற்றல் வாங்கிச் சென்று விடுகின்றனர்.
இம்மாவட்டத்தில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 40 உயர்நிலைப் பள்ளிகள், 18 உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள், 13 உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 459 ஆரம்பப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. பத்தாம் வகுப்பில் 6,015 மாணவர்களும், பிளஸ் 2 வகுப்பில் 4,880 மாணவர்களும் படித்து வருகின்றனர்.
தேவாலா, அதிகாரட்டி, அன்னேரிமந்தானை, குன் னுõர், பன்டலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகளில் காலி ஆசிரியர் பணியிடங்கள் அதிகளவில் இருக்கின்றன. இளநிலை ஆசிரியர்கள் நிலையில், 123 பணியிடங்கள், பட்டதாரி ஆசிரியர் நிலையில் 60 பணியிடங்கள், முதுகலை ஆசிரியர் நிலையில் 79 பணியிடங்கள் என 262 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
மேலும், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்கத்தின் சார்பிலான ஆசிரியர் பணியிடங்களும் பல நிரப்பப்படாமல் உள்ளன. குறிப்பிட்ட பாடங்கள் என்றில்லாமல், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் என எல்லா பாடங்களிலும் காலி பணியிடங்கள் இருக்கின்றன.
இந்நிலையில், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களின் கல்வி செயல்பாடுகள் குறித்து, வரும் 18ம் தேதி ஊட்டியில் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். நீலகிரி மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
