பாலிடெக்னிக் மாணவர்களுக்கு 'ஆன்லைன்' பயிற்சி வகுப்பு நிறுத்தம்
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு 'ஆன்லைன்' பயிற்சி வகுப்பு நிறுத்தம்
UPDATED : நவ 27, 2025 09:12 AM
ADDED : நவ 27, 2025 09:14 AM

சென்னை:
தமிழக உயர்கல்வித்துறையின், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ், 55 அரசு, 34 அரசு உதவி, 391 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
இதில், 12,000க்கும் அதிகமான மாணவ - மாணவியர் இறுதியாண்டு படித்து வருகின்றனர். அவர்களுக்கு, வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி எனும் பெயரில், இரண்டு வார கால 'ஆன்லைன்' பயிற்சி வழங்க, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் திட்டமிட்டது.
இந்த பயிற்சிகள், தினமும் 9 மணி நேரம் நடத்த வேண்டும் என, அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர்களுக்கும், தொழில்நுட்பக் கல்வி கமிஷனர் இன்னசென்ட் திவ்யா சுற்றறிக்கை அனுப்பினார்.
இந்த 9 மணி நேர 'ஆன்லைன்' வகுப்பில், அரை மணி நேரம், உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள நேரம், வகுப்புகளில் மாணவ - மாணவியர் பங்கேற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
மேலும், 'ஆன்லைன்' பயிற்சி அளிக்கும் ஜெயாபாரதியின், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தை பின் தொடர வேண்டும் என, மாணவ - மாணவியர் அறிவுறுத்தப்பட்டதாகவும், தகவல் வெளியானது. இந்த உத்தரவுகள், கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது அந்த பயிற்சி வகுப்புகள், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களில் பெய்து வரும், தொடர் கனமழை மற்றும் வட மாவட்டங்களில் விடுக்கப்பட்டுள்ள மழை எச்சரிக்கை, காரணமாக 'ஆன்லைன்' பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர்கள் கூறியதாவது:
மாணவ - மாணவியரை, மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாக்கும் வகையில், இரண்டு வார 'ஆன்லைன்' பயிற்சி வகுப்புகளை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து, மழையை காரணம் காண்பித்து, தற்காலிகமாக பயிற்சி வகுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இறுதியாண்டு மாணவ - மாணவியருக்கு, வரும் 1ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு, தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சிகள் நடக்க உள்ளன. எனவே, 'ஆன்லைன்' பயிற்சி வகுப்புகளை, முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

