பிஞ்சு விரல்களில் 'அ'கரம் 'தினமலர்' சார்பில் 20ல் வித்யாரம்பம்: அறிவின் வாயிலில் முதல் அடி
பிஞ்சு விரல்களில் 'அ'கரம் 'தினமலர்' சார்பில் 20ல் வித்யாரம்பம்: அறிவின் வாயிலில் முதல் அடி
UPDATED : அக் 11, 2026 01:04 PM
ADDED : அக் 11, 2026 01:13 PM
திருப்பூர்:
விஜயதசமி நாளில் குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்கிவைக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, அவிநாசி அருகே ராக்கியாபாளையம் ஐஸ்வர்யா கார்டனில் உள்ள ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் வரும் அக்., 20ம் தேதி நடைபெறுகிறது.
வெற்றியின் அடையாளமான விஜயதசமி, புதிய முயற்சிகளையும் கல்வியையும் தொடங்குவதற்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது. தாம்பாளத்தில் பரப்பப்பட்ட நெல்மணிகளின் மீது, பெற்றோர் குழந்தையின் கரம் பற்றி 'அ' என்று எழுதச் செய்யும் மரபு, தலைமுறைகள் கடந்து தொடர்கிறது. அந்த முதல் எழுத்தில் தொடங்குகிறது, வாழ்நாள் முழுவதும் தொடரும் கல்விப் பயணம்.
அந்தப் பாரம்பரியத்தின் இனிமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் இணைந்து, 'அ'னா… 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்' என்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்துகின்றன.
அவிநாசி அருகே ராக்கியாபாளையம் ஐஸ்வர்யா கார்டன், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், அக்., 20ம் தேதி காலை 07:35 மணி முதல் 10:00 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அம்பாளின் அருளை வேண்டி, குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்கிவைக்கும் இந்த நிகழ்வில் பெற்றோர் பங்கேற்கலாம்.
இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரையிலான குழந்தைகளுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். பங்கேற்கும் குழந்தைகளுக்கு பள்ளிப் பை, சிலேட், பென்சில் உள்ளிட்ட கல்விப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.
தங்கள் குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிடித்து, முதல் எழுத்தை எழுதச் செய்ய விரும்பும் பெற்றோர், குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் 96887 53040 என்ற எண்ணில், காலை 10:00 முதல் மாலை 05:00 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு குழந்தையின் முதல் எழுத்து… ஒரு குடும்பத்தின் கனவுத் தொடக்கம்! அம்பாளின் அருளோடும், அறிவின் ஒளியோடும் மழலைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்கிவைக்கும் இந்த இனிய தருணத்தில், பெற்றோரும் குழந்தைகளும் பங்கேற்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
ஸ்கூல் பேக், சிலேட், பென்சில் குட்டீஸூக்கு வழங்கப்படும்
வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி முற்றிலும் இலவசம். பங்கேற்கும் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், சிலேட், பென்சில் உட்பட கல்வி பொருட்கள் வழங்கப்படும்.
