தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலையின் ரூ.4,000 கோடி நிலங்கள் அம்போ! ஆக்கிரமிப்பு கும்பலுக்கு அரசும் உடந்தை என புகார்

சென்னை பல்கலையின் ரூ.4,000 கோடி நிலங்கள் அம்போ! ஆக்கிரமிப்பு கும்பலுக்கு அரசும் உடந்தை என புகார்

சென்னை பல்கலையின் ரூ.4,000 கோடி நிலங்கள் அம்போ! ஆக்கிரமிப்பு கும்பலுக்கு அரசும் உடந்தை என புகார்


UPDATED : பிப் 09, 2026 10:59 PM

ADDED : பிப் 09, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2026 10:59 PM ADDED : பிப் 09, 2026 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடனில் சிக்கித் தவிக்கும் சென்னை பல்கலைக்கு சொந்தமான, 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் பயன்பாடின்றி முடங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு கும்பல் அபகரித்து வருவதாகவும், அவற்றை மீட்க முயற்சிக்காமல், அரசு உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லண்டன் பல்கலையின் மாதிரியை பின்பற்றி, 1857ல், பிரிட்டிஷ் அரசால், மதராஸ் மாகாணத்தில் துவக்கப்பட்டது சென்னை பல்கலை. தென்மாநிலங்களின் தாய் பல்கலையான இதில் படித்த சர் சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர் ஆகியோர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளாகவும், ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் ஆகியோர் ஜனாதிபதியாகவும், சீனிவாசன் ராமானுஜன் உலக கணித மேதையாகவும் புகழ்பெற்றனர்.

பல்கலையில், 80க்கும் மேற்பட்ட துறைகளின் வாயிலாக, 230க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவ்வளவு சிறப்புமிக்க இந்த பல்கலைக்கு, 2023 ஆக., மாதம் முதல் நிரந்தர துணைவேந்தர் இல்லை.

துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு என்பதில், மத்திய, மாநில அரசுகள் இடையே ஏற்பட்டுள்ள மோதலே இதற்கு காரணம். இதனால், முக்கிய நிர்வாக முடிவுகள், நிதி ஒதுக்கீடுகள், பேராசிரியர் நியமனம் உள்ளிட்ட பணிகள் அப்படியே முடங்கி, பல்கலை ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், பல்கலைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் பயன்படுத்தப்படாமலும், ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ளதாக, கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு மவுனம்


இதுகுறித்து, ஓய்வு பெற்ற பல்கலை பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறியதாவது:

சென்னை பல்கலைக்கு, அசையா சொத்துகளாக நிலங்கள் பல இடங்களில் உள்ளன. முக்கியமாக, மண்ணடியில் 84 சென்ட் நிலம் உள்ளது. இதை ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அங்கு ஆறடுக்கு கட்டடங்களைக் கட்ட உத்தரவிட்டுள்ளார். அதாவது, வீட்டில் வசதியில்லாத வடசென்னைவாசிகளுக்கு, கணினி வழியில் பணிபுரியவும், புத்தகங்களை எடுத்துவந்து போட்டித் தேர்வுக்கு படிக்கவும், வசதிகள் அங்கு செய்யப்படும் என, தெரிவித்துள்ளார். இதனால், பல்கலைக்கு ஒரு ரூபாய் கூட வருவாய் கிடைப்பதற்கான வழி இல்லை.

சேப்பாக்கம் வளாகத்தில், ராமானுஜம் கணித மையம் இருந்த வளாகத்தில், 500 மாணவியர் தங்கி இருந்த மகளிர் விடுதி சிதிலமடைந்து இருப்பதாகக் கூறி, அரசு கைப்பற்றியது. தற்போது அங்கு, 3 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, சமூக நலத்துறை சார்பில், பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் கட்டும் பணியில், காவலர் வீட்டு வசதி வாரியம் ஈடுபட்டுள்ளது. அதில், 100 அறைகள், பல்கலை மாணவியருக்கு ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மாணவியருடன், பணிபுரியும் மகளிர் தங்குவது சரியா என்ற மாணவர்களின் கேள்விக்கு, அரசு மவுனத்தை மட்டும் தான் பதிலாக தந்துள்ளது.

பாலவாக்கத்தில் 13 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு, பல்கலை நிர்வாக அலுவலர்கள் 150 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டன. அவற்றில் பாதிக்கு மேல் தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டன.

சுக போகம்

அங்கிருந்த பயன்படுத்தப்படாத 2 கிரவுண்ட் இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் டென்னிஸ் பயிற்சியகம், காய்கறி கடைகள் உள்ளிட்டவற்றை கட்டி பணம் ஈட்டுகின்றனர். மீதமுள்ள இடத்தில் மாநகராட்சி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி நடக்கிறது. இதை எதிர்த்து, குடியிருப்போர், நிர்வாக பணியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என மூன்று பிரிவினரும் தனித்தனியாக சங்கம் வைத்து, வழக்குகளை நடத்தி வருகின்றனர்.

பல்கலையில் தாவரவியல் பயிலும் மாணவர்களின் ஆய்வுக்காக, மதுரவாயலில் நெடுஞ்சாலைக்கு அருகில், 10 ஏக்கர் நிலத்தில், கிணறு, ஆழ்குழாய் கிணறு, அரியவகை தாவரங்கள், மரங்களுடன் தோட்டம் உள்ளது. தாவரவியல் துறை இதை பயன்படுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகள், கடைகளை கட்டி, வாடகைக்கு விட்டு சுக போகமாக வாழ்கின்றனர்.

சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பல்கலை நிலத்தில், உலக பல்கலை மையம் எனும் 'உஸ்' நிர்வாகம் நடக்கிறது. அருகில், தங்கும் விடுதிகள், உணவகங்கள் என, தனியார் நிர்வாகங்கள் என, ஆக்கிரமிப்பாளர்கள் ஏகபோகமாக நடமாடுகின்றனர். தரமணி வளாகத்தில், 14 ஏக்கர் நிலத்தில், 5 மாணவர் விடுதிகள் மற்றும் 9 துறைகளுக்கான கட்டடம் 22 கோடி ரூபாயில் கட்டப்பட்டது. ஒப்பந்ததாரருக்கு, பொதுப்பணித் துறை கடைசி தவணையை தராததால், எலக்ட்ரிக்கல், பிளம்பிக் வேலைகள் முடிக்கப்படவில்லை. இக்கட்டடங்கள், பயன்பாடில்லாமல் 11 ஆண்டுகளாக பாழடைவதுடன், சமூக விரோதிகளை தஞ்சமடையும் இடமாகவும் உள்ளது.

அதே போல், சிறுதாவூரில் 8 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது போல், கிண்டியில் 25 ஏக்கர் நிலம், அண்ணா பல்கலைக்காக வெறும் 8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராயப்பேட்டை, கவுடியா மடம் சாலையில், 1.5 கிரவுண்ட் இடம் தனியார் வசம் உள்ளது. இப்படி, சென்னையின் அதிமுக்கியமான இடங்களில் உள்ள சென்னை பல்கலை இடங்களை பல துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அரசும், தனியாரும் ஆக்கிரமித்துள்ள 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை மீட்டு, அவற்றை பயன்படுத்துவதற்கான உரிமையை, பல்கலை நிர்வாகத்திடம் கொடுத்தாலே, நாட்டின் முன்னணி பல்கலையாக சென்னை பல்கலை மாறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கல்விக்கூடங்கள் சுயசார்பு பெறுமா, அரசிடம் கையேந்தி, கால் கடுக்க நிற்குமா என்பதை கல்வியாளர்களைப் போல், மாணவ - மாணவியரும் எதிர்பார்க்கின்றனர்.

நிதி நெருக்கடி


சென்னை பல்கலையின் வங்கி கணக்குகள், முறைகேடு புகார்களால் முடங்கி உள்ளதால், நிதி சிக்கல் கடுமையாகி உள்ளது. முக்கியமாக வருமான வரி பாக்கி, தணிக்கை தொடர்பான ஆட்சேபனைகளால் மானியம் நிறுத்தம், ஓய்வூதிய நிதி செலவு செய்யப்பட்டதால், ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்களில் நிலுவை, அதை ஈடுகட்ட, சிண்டிகேட்டின் முறையற்ற அனுமதியால் மூலதன நிதி உடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளும், சர்ச்சைகளும் பூதாகரமாகி உள்ளன.

'உயர்வுக்குப்படி, நான் முதல்வன்' என பல்வேறு பெயர்களில் திட்டங்களை அறிவித்து வரும் தமிழக அரசு, போதிய நிதியை ஒதுக்குவதில் இருந்து ஒதுங்கிவிட்டது. இதனால் பல்கலை, கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில், பல்கலையின் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவது, சென்னை பல்கலையை ஒழிக்கும் முயற்சியாகவே, பலரும் பார்க்கின்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us