UPDATED : மே 13, 2026 03:13 PM
ADDED : மே 13, 2026 03:16 PM
புதுடில்லி:
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.60 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.எப்.எஸ்., எனும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2025 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 6.70 சதவீதமாக இருந்த நகர்ப்புற வேலையின்மை, நடப்பாண்டு ஜனவரி - மார்ச் காலாண்டில் 6.60 சதவீதமாக குறைந்துள்ளது.
அதே நேரத்தில், கிராமப்புறங்களில், வேலையின்மை விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.30 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது.
கிராமப்புற வேலைவாய்ப்பை பொறுத்தவரை, விவசாய துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 58.50 சதவீதத்தில் இருந்து 55.80 சதவீதமாக குறைந்துள்ளது.
மாறாக, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், சுயதொழில் செய்வோரின் பங்கு 63.20 சதவீதத்தில் இருந்து 62.50 சதவீதமாக குறைந்து, மாத சம்பளம் பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
