மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீடு: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீடு: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
UPDATED : டிச 16, 2020 12:00 AM
ADDED : டிச 16, 2020 08:50 AM
சென்னை:
மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை, மதுரவாயலை சேர்ந்த, மாணவி பூஜா தாக்கல் செய்த மனு:
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, &'நீட்&' தேர்வை, மூன்றாவது முறையாக எழுதி, 565 மதிப்பெண் பெற்றேன். தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்தேன். மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைக்கும் என்ற, நம்பிக்கையுடன் இருந்தேன்.
முன்னுரிமை
தமிழக அரசு புதிதாக ஏற்படுத்திய சட்டத்தில், மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய சட்டத்தால், 350 இடங்கள், என்னை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு செல்கிறது. 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி பார்த்தால், மூன்று மாணவர்கள் தான், என்னை விட அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தமிழக அரசு இயற்றிய சட்டம், பாரபட்சமாக உள்ளது. தகுதி அடிப்படையில் தேர்வு செய்வதற்கு, நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு என, தனி ஒதுக்கீடு ஏற்படுத்தியிருப்பது, நீட் தேர்வின் நோக்கத்தை பாழ்படுத்துவது; தகுதியை காற்றில் பறக்க விடுவது போன்றது. அரசு பள்ளி மாணவர்களை தனியாக வகைப்படுத்தி, அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பது, ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணானது.
நுழைவு தேர்வு நடத்திய பின், தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; வேறு வகையில் முன்னுரிமை அளிக்கக் கூடாது.புதிய இட ஒதுக்கீட்டால், அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில், 133 மதிப்பெண் பெற்றவருக்கு, அரசு கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளது.
விசாரணை
ஆனால், நான்கு மடங்கு அதிக மதிப்பெண் பெற்றும், அரசு கல்லுாரியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. அரசு பள்ளிகளில் படிக்கவில்லை என்றாலும், என்னை போன்றவர்களும் இதே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்குவது, தன்னிச்சையானது; மாற்றான் தாய் மனப்பான்மையை காட்டுவது போலாகும்.
எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, &'&'மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்; இடைக்கால தடை விதிக்கக் கூடாது,&'&' என்றார்.
நடவடிக்கை
அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு ஏற்று, அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டனர்.
புதிய சட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட, 7.5 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன; தடை விதிக்க கூடாது என, அட்வகேட் ஜெனரல் தெரிவித்ததால், இடைக்கால நிவாரணம் வழங்க விரும்ப வில்லை என, நீதிபதிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, தாக்கல் செய்யப்பட்டுள்ள இதே கோரிக்கை அடங்கிய மனுக்களையும், இத்துடன் சேர்க்கும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 5க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
