சென்டாக் மூலம் 8,855 சீட்டுகள் நிரம்பின: இறுதி கட்டத்தில் மாணவர் சேர்க்கை
சென்டாக் மூலம் 8,855 சீட்டுகள் நிரம்பின: இறுதி கட்டத்தில் மாணவர் சேர்க்கை
UPDATED : ஜன 23, 2025 12:00 AM
ADDED : ஜன 23, 2025 10:12 AM
புதுச்சேரி:
சென்டாக் மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில், இதுவரை 8,855 சீட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன. இருப்பினும் 3 ஆயிரம் சீட்டுகள் வரை இந்தாண்டு கடைசி வரை நிரம்பால் காலியாகவே இருக்கும். சென்டாக் மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில், இதுவரை 8,855 சீட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன. இருப்பினும் 3 ஆயிரம் சீட்டுகள் வரை இந்தாண்டு கடைசி வரை நிரம்பால் காலியாகவே இருக்கும்.
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள முதலாமாண்டு காலியிடங்கள் மையப்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கை அமைப்பான சென்டாக் மூலம் ஆண்டு தோறும் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த கல்வியாண்டு, காலத்தோடு மாணவர் சேர்க்கை பணிகளை முன் கூட்டியே சென்டாக், துவங்கிய நிலையில், தற்போது மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளை தவிர்த்து மற்ற அனைத்து படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை காலத்தோடு முடிந்துவிட்டது.
கடும் போட்டி
கலை அறிவியல் படிப்புகளை பொருத்தவரை 4320 இடங்கள் நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டன. இந்த படிப்புகளுக்கு இந்தாண்டு கடும் போட்டி இருந்தது. மொத்தம் 14,911 விண்ணப்பங்கள் குவிந்தன. இதில் 3,123 சீட்டுகள் நிரப்பப்பட்டன. வரவேற்பு இல்லாத படிப்புகளில் 1,197 சீட்டுகள் நிரம்பவில்லை.
தொழில் படிப்பு
இதேபோல், நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத தொழில் படிப்புகளிலும், இந்தாண்டு கடும் போட்டி இருந்தது. இந்தாண்டு, 5,917 சீட்டுகள் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த படிப்புகளுக்கு 14,911 விண்ணப்பங்கள் குவிந்திருந்த சூழ்நிலையில், 4353 சீட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன. வரவேற்பு இல்லாத தொழில்படிப்புகளில் 1,564 சீட்டுகள் நிரம்பவில்லை.
லேட்ரல் என்ட்ரி
புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்காக, 10 சதவீத இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டு தோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவர்கள் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இந்தாண்டு இளநிலை படிப்பகளில் 309 லேட்ரல் என்ட்ரி சீட்டுகள் இருந்தன. இந்த இடங்களுக்கு163 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதிலும் 110 சீட்டுகள் மட்டுமே இந்தாண்டு நிரப்பப்பட்டன. 199 சீட்டுகள் கடைசி வரை நிரம்பவில்லை.
பி.ஆர்., படிப்பினை பொருத்தவதரை மொாத்தமுள்ள 20 சீட்டுகளுக்கு 36 பேர் விண்ணப்பித்து இருந்த சூழ்நிலையில், 13 சீட்டுகள் நிரம்பி, 7 சீட்டுகள் நிரப்பப்படவில்லை.பாரதியார் பல்கலைகூடத்தில் உள்ள 75 சீட்டுகளுக்கு இந்தாண்டு 114 விண்ணப்பங்கள் வந்தன. 43 சீட்டுகள் நிரப்பப்பட்டன. 32 சீட்டுகள் நிரம்பவில்லை. முதுநிலை பல் மருத்துவ படிப்பில் உள்ள 37 சீட்டுகளுக்கு 97 பேர் விண்ணப்பித்தனர். இவற்றில் 37 சீட்டுகளும் முழுமையாக நிரப்பப்பட்டு விட்டன.
மருத்துவம்
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான தொழில் படிப்புகளை பொருத்தவரை, 1180 சீட்டுகள் உள்ளன. இந்த இடங்களுக்கு 5,633 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1176 சீட்டகள் நிரப்பப்பட்டது. பல்வேறு காரணங்களால் 4 சீட்டுகள் நிரம்பவில்லை.
முதுநிலை எம்.டி., எம்.எஸ்., படிப்புகளை பொருத்த வரை மொத்தமுள்ள 343 சீட்டுகளுக்கு 2198 விண்ணப்பித்துள்ளனர். இந்த இடங்களுக்கு மட்டும் இன்னும் மாணவர் சேர்க்கை இன்னும் முடியவில்லை. ஒன்பது கல்வி பிரிவுகளில் சென்டாக் மூலம் இந்தாண்டு 12,201 சீட்டுகள் நிரப்ப அனுமதி கிடைத்த நிலையில், இந்த இடங்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்தமாக 23,152 விண்ணப்பங்கள் குவிந்திருந்தன.
இதில், 8,855 சீட்டுகளை சென்டாக் நிரப்பியுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான சீட்டுகள் முழுமையாக நிரம்பும்போது, நிரப்பப்பட்ட சீட்டுகளின் எண்ணிக்கை 9,198 ஆக அதிகரிக்கும். இருப்பினும் இறுதியாக 3,003 சீட்டுகள் நிரம்பாமல் காலியாகவே இந்தாண்டு இருக்கும் என்பத குறிப்பிடத்தக்கது.
சென்டாக் அதிகாரிகள் கூறும்போது, விண்ணப்பங்கள் குவிந்து இருந்தாலும் சில படிப்புகளில் சேர மாணவர்கள் விரும்பவில்லை. ஒரு காலத்தில் இந்த படிப்புகள் கோலோச்சியவை. இப்போது வரவேற்பு இல்லாத காரணத்தால், மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்தாண்டு 3 ஆயிரம் வரை சீட்டுகள் காலியாகவே இருக்கும். எந்தந்த படிப்புகளில் மாணவர்கள் சேரவில்லை என்பது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றனர்.