தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 94.1 பேர் சதவீதம் தேர்ச்சி; முழு மதிப்பெண் எடுத்து ஏழு பேர் சாதனை

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 94.1 பேர் சதவீதம் தேர்ச்சி; முழு மதிப்பெண் எடுத்து ஏழு பேர் சாதனை

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 94.1 பேர் சதவீதம் தேர்ச்சி; முழு மதிப்பெண் எடுத்து ஏழு பேர் சாதனை


UPDATED : ஏப் 24, 2026 12:19 PM

ADDED : ஏப் 24, 2026 12:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 24, 2026 12:19 PM ADDED : ஏப் 24, 2026 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. 94.1 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 625க்கு 625 மதிப்பெண் எடுத்து ஏழு பேர் சாதனை படைத்து உள்ளனர்.

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக பள்ளி தேர்வாணையம், தேர்வு மதிப்பீடு வாரிய அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா நேற்று மதியம் 12:15 மணிக்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

பின், அவர் அளித்த பேட்டி:

பி.யு.சி., தேர்வு முடிவுகளை வெளியிடும் போது, நான் கூறியதை போன்று இப்போதும் கூறுகிறேன். எஸ்.எஸ்.எல்.சி., தேர்விலும் வரலாற்று சிறப்புமிக்க முடிவு கிடைத்து உள்ளது. தேர்வு எழுத, 7 லட்சத்து 75,999 மாணவ, மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 7 லட்சத்து 70,209 பேர் தேர்வு எழுதினர். 5,790 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வில், 94.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட, 14.06 சதவீதம் அதிகம்.

வழக்கம் போல மாணவர்களை விட மாணவியரே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3 லட்சத்து 92,922 மாணவியர் தேர்வு எழுதினர். அவர்களில், 3 லட்சத்து 77,922 பேர் வெற்றி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம், 96.18; மாணவர்கள் 3 லட்சத்து 77,287 பேர் எழுதியதில் 3 லட்சத்து 46,872 பேர் வெற்றி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.94.

பிரார்த்தனா பெலகாவியின் சிக்கோடி கல்வி மாவட்டம் அதானி தாலுகா கடகேரி அரசு பள்ளி மாணவி பிரார்த்தனா நாகப்பா பிரதார் பாட்டீல்; தாவணகெரே சன்னகிரியின் வித்யலட்சுமி ஆங்கில வழி உயர்நிலை பள்ளி மாணவர் பாரத்; சிக்கமகளூரின் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி பிருந்தா தாப்சி; பெங்களூரு வடக்கு சதாசிவநகர் பூர்ணபிரஜா கல்வி மைய மாணவர் தனுஷ் சுதீர் மைசூரு; உடுப்பி மதர் தெரசா பள்ளி மாணவர் பிரீத்தம் பூஜாரி; விஜயபுராவின் முத்தேபிஹால் ஆக்ஸ்போர்டு ஆங்கில வழி உயர்நிலை பள்ளி மாணவி சவுஜன்யா; ராய்ச்சூர் மான்வி பி.வி.ஆர்., பள்ளி மாணவர் சுக்தேவ் ஆகிய ஏழு பேர் 625க்கு 625 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்து உள்ளனர்.

தேர்வில் 45,415 மாணவ, மாணவியர் தோல்வி அடைந்து உள்ளனர். அவர்களுக்கான, 2வது தேர்வு மே மாதம், 18ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடக்க உள்ளது. வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை மூன்று முறை நடத்துவோம். இனி இரண்டு முறை மட்டுமே நடத்தப்படும். முதல் தேர்வில் தோல்வி அடைந்து 2வது தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். இம்முறை அதையும் ரத்து செய்து உள்ளோம்.

கவுரவ ஆசிரியர் ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் தேர்ச்சி அடைய, 35 மதிப்பெண்ணை 33 மதிப்பெண்ணாக குறைத்து உள்ளோம். தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து, அதன் மூலம் பெருமைப்பட்டு கொள்வது எங்கள் நோக்கம் இல்லை. அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று, அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதே குறிக்கோள்.

மூன்றாவது மொழி பாடங்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக கிரேடு வழங்கும் விஷயத்தில், நீதிமன்ற உத்தரவை கடைப்பிடித்து உள்ளோம். அதுபற்றி இன்று எதுவும் பேச மாட்டேன். சில நாட்கள் கழித்து பேசுகிறேன்.

சில மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது உண்மை தான். ஜூன், 1ம் தேதியில் இருந்து கவுரவ ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவர். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்போம். கடந்த ஆண்டு நவம்பர், 14ம் தேதி முதல், அரசு பள்ளிகளிலும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடத்துகிறோம்.

இதுவும் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஒரு காரணம். சுமாராக படிக்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுத்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கு என் வாழ்த்துக்கள். என் துறை அதிகாரிகள், அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் 64 பேர் வெற்றி

முதல் மொழி பாடமாக தமிழை எடுத்து தேர்வு எழுதிய, 72 பேரில் 64 பேர் வெற்றி பெற்று உள்ளனர். பெங்களூரு தியாகராஜநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா செந்தில் குமரன் பள்ளி மாணவி ஷாலினி தமிழில், 125 க்கு 121 மதிப்பெண்கள் எடுத்து உள்ளார். அப்பள்ளி மாணவியர், சந்தியா 120, நிவேதிதா 120 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர். இவர்களுக்கு பள்ளியின் தலைவர் லட்சுமிபதி, இயக்குனர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

பார்வை குறைபாடு உடைய மாணவிக்கு நடந்த அநீதி

உத்தர கன்னடாவின் சிர்சியை சேர்ந்தவர் லீசா கான். பார்வை குறைபாடு உடைய இவர், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினார். படிப்பில் சிறந்த மாணவியான இவர் நேற்று வெளியான தேர்வு முடிவில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவோம் என்று ஆர்வமாக இருந்தார். ஆனால், அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. சமூக அறிவியல் தேர்வை அவர் எழுதிய போதும், தேர்வுக்கு வரவில்லை என்று கூறி கல்வித்துறை, 'ஆப்சென்ட்' போட்டு உள்ளது.

தேர்வில் உருதுவில் 124; கன்னடத்தில் 100; ஆங்கிலத்தில் 92; பொருளாதாரத்தில் 98; அரசியல் அறிவியலில் 92 மதிப்பெண்களை அவர் எடுத்து உள்ளார். தனக்கு நடந்த அநீதியால் லீசா கான் மனம் உடைந்துள்ளார். 'தேர்வில் நான், 98 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகாரிகள் அலட்சியத்தால் இப்போது ஒரு பாடத்தில் பெயில் என்று உள்ளது. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' என்றார் லீசா கான்.

தாய், தந்தை இறந்த துக்கத்திலும் சாதனை

விஜயநகரின் ஹொசபேட் டவுனில் வசிக்கும் எஸ்.எஸ்.எல்.சி., மாணவி சபா பரீன். தேர்வு துவங்குவதற்கு, 10 நாட்களுக்கு முன் மாணவியின் தாய் இறந்தார். தாய் இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய சபா பரீன் 596 மதிப்பெண்கள் எடுத்து உள்ளார்.

இதே போல ஷிவமொக்கா மாணவர் பிரீத்தம், தந்தை மஞ்சுநாத் இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதி 312 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்று உள்ளார். தந்தையின் ஆன்மா சாந்தி அடையும் என்று கண்ணீர்மல்க கூறினார்.

ஸ்டிரெச்சரில் வந்து தேர்வு எழுதிய மாணவி 374 மார்க் பெற்றார்

தங்கவயலின் சின்னநகரஹள்ளி கிராமத்தை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி., மாணவி குஸ்மா. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விபத்தில் இவரது வலது கால் போனது.

செயற்கை கால் பொருத்தப்பட்டு உள்ளது. முதுகு தண்டிலும் அடிபட்டதால் படுத்த, படுக்கையானார். அந்த நிலையிலும் படித்த அவர், தேர்வு எழுத ஆசைப்பட்டார். தேர்வு நடந்த போது தினமும் தேர்வு மையத்திற்கு ஸ்டிரச்சரில் அழைத்த வரப்பட்டார். ஸ்ரெச்சரில் படுத்திருந்தபடியே தேர்வு எழுதினார். நேற்று வெளியான முடிவுகளில் 625க்கு 374 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று உள்ளார்.

தங்கவயலில் 21 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி

தங்கவயலில் 15 அரசு பள்ளிகள், 11 அரசு உதவி பெறும் பள்ளிகள், 28 அரசு உதவி பெறா பள்ளிகள் என 54 பள்ளிகளை சேர்ந்த 3,077 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2,894 பேர் வெற்றி பெற்று உள்ளனர். மாணவர்கள் 368, மாணவர்கள் 1,526 பேர் வெற்றி வாகை சூடி உள்ளனர். கோனமாக்கனஹள்ளி, ராமசாகர், படமாக்கனஹள்ளி, கண்டகூர் அரசு உயர்நிலை பள்ளிகள்; தங்கவயல், சிக்ரகுப்பா மொரார்ஜி தேசாய் பள்ளி.

தங்கவயல் அம்பேத்கர், சுவாமி விவேகானந்தா, எக்சலண்ட், செயின்ட் சார்லஸ், பேத்தமங்களா பவானி, விஜயேந்திரா, கிரீன் வுட்ஸ், தத்த சாய், சுந்தரபாளையம் அப்பல்லோ, தொட்டகாரி வேணு, டி.கொல்லஹள்ளி விமலா உதயா, அய்சஹள்ளி செயின்ட் அனேஸ், மஜுரா குட்டஹள்ளி வேமண்ணா, ஜே.கே.புரம் வித்யா சம்ஸ்கிருதி, கம்மசந்திரா நியூ ஆக்ஸ்போர்டு என, 21 உயர்நிலை பள்ளிகள் 100க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.

சின்மயா வித்யாலயா பள்ளி

பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் ரோடு கிராசில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியின் யுவஸ்ரீ கடியாலா 625க்கு 613; விதுலா 608; சொக்கலிங்கம் 591; நிதி குப்தா 585; நிரஞ்சன், ஸ்ரேயா 574 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.

ஆங்கிலத்தில் விதுலா 125க்கு 125; கன்னடத்தில் சொக்கலிங்கம், ஈஸ்வர் சாஸ்திரி, கனிஷ்கா, நரேந்திரா, யுவஸ்ரீ கடியாலா 100க்கு 100; ஹிந்தியில் ஜான்வி 100க்கு 100; சமஸ்கிருதத்தில் மஹிமா 99; சமூக அறிவியலில் கனிஷ்கா, விதுலா, யுவஸ்ரீ கடியலா 99 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தனர். 33 மாணவர்கள் டிஸ்டிங்சனிலும்; 25 மாணவர்கள் முதல் வகுப்பிலும்; 4 மாணவர்கள் 2ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று உள்ளனர். 15 மாணவர்கள் ஏ பிளஸ் கிரேடு எடுத்து உள்ளனர்.

நகரத்தை விட கிராமம் அதிகம்

நகர பகுதிகளை சேர்ந்த 3,27,929 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியதில் 3,05,533 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி, 93.2 சதவீதம். கிராம பகுதியில் 4 லட்சத்து 42,280 பேர் தேர்வு எழுதி 4 லட்சத்து, 19,261 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 94.80.

21 பேர் 624 மதிப்பெண்

தேர்வில் ஏழு பேர் 625க்கு, 625 மதிப்பெண் எடுத்து உள்ள நிலையில் 21 பேர் 624; 28 பேர் 623; 74 பேர் 622; 98 பேர் 621; 150 பேர் 620 மதிப்பெண்கள் எடுத்து அசத்தி உள்ளனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us